புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்து முறைகேடு..? தற்காலிக பணியாளர் கைது ..!!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்து முறைகேடு..? தற்காலிக பணியாளர் கைது ..!!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தூக்க மாத்திரைகள் திருடப்பட்டு, அவை போதைப் பொருளாக பயன்படுத்துவதற்காக இளைஞர்களிடம் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில், மருத்துவமனையின் மருந்தகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றிய பிரேம்குமார் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, உயிர்காக்கும் மருந்துகள் பாதுகாப்பாக கையாளப்பட வேண்டிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருந்து விநியோகம் போன்ற முக்கியப் பொறுப்புகளில் நிரந்தரப் பணியாளர்களை நியமிக்காமல், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்களை நியமிக்க மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஏன் முடிவு செய்தது என்று பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கேள்விகள் எளும்பி வருகிறது.

இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், இதற்கு முன்பும் இதேபோன்று மருத்துவமனையில் இருந்து எவ்வளவு மருந்துகள் முறைகேடாக வெளியேறியிருக்கலாம், எத்தனை நோயாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மருந்துகள் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதையும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து தமிழக அரசு உடனடியாக உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்து, சம்பவத்தின் முழு பின்னணியையும் விசாரித்து, இதில் தொடர்புடையவர்கள் யார் என்பதையும் கண்டறிந்து, தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

அதே நேரத்தில், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறையும், மருத்துவக் கல்லூரி நிர்வாகமும் ஆரம்பத்தில் எந்த விளக்கமும் அளிக்காமல் மௌனம் காத்ததாகவும், சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி நடைபெற்றதாகவும் கூறப்படும்.இது குறித்து
குற்றச்சாட்டுகள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.