ஜோகூர் பாரு–சிங்கப்பூர் RTS Link: நொடிகளில் குடிநுழைவு அனுமதி..! 100 இ-கேட் வசதி!

ஜோகூர் பாரு–சிங்கப்பூர் RTS Link: நொடிகளில் குடிநுழைவு அனுமதி..! 100 இ-கேட் வசதி!

ஜோகூர் பாரு–சிங்கப்பூர் இடையிலான RTS Link ரயில் சேவை தொடங்கிய பிறகு, பயணிகள் சில நொடிகளில் குடிநுழைவு சோதனையை முடித்துக்கொள்ளும் வகையில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த அதிவிரைவு ரயில் சேவை 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜோகூர் பாருவில் உள்ள Bukit Chagar Integrated Immigration, Customs and Quarantine (ICQ) வளாகத்தில் 100 இ-கேட் வழிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த இ-கேட்கள் மூலம் பயணிகள் QR குறியீடு அல்லது கடப்பிதழை (Passport) பயன்படுத்தி குடிநுழைவு அனுமதியைப் பெற முடியும் என்று RTS Link திட்ட இயக்குநர் ஸுல்கிஃப்லி முகம்மது தெரிவித்துள்ளார்.

பயணிகள் முதலில் ஸ்கேனர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். பயணிகள் நடந்து செல்லும்போதே அவர்களிடம் இருக்கும் தடை செய்யப்பட்ட பொருட்களை கண்டறியும் வகையில் இந்த ஸ்கேனர்கள் செயல்படும்.

சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டறியப்பட்டால், அந்த பயணி தனியாக இரண்டாம் கட்ட சோதனைக்கு அழைத்துச் செல்லப்படுவார். இதன் மூலம் மற்ற பயணிகளின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளப்படும்.

Bukit Chagar ICQ வளாகத்தில் குடிநுழைவு வசதிகளுடன், தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, தொழுகை அறைகள் மற்றும் சுயசேவை பயணச்சீட்டு நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் அரசு அமைப்புகளின் அலுவலகங்களும் இந்த வளாகத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோகூர் பாரு-சிங்கப்பூர் RTS Link சேவை 2027 ஜனவரி 1ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 4 கி.மீ. தொலைவைக் கொண்ட இந்த ரயில்இணைப்பு, ஜோகூர் பாருவில் உள்ள Bukit Chagar பகுதியை Singapore-ன் Woodlands North பகுதியுடன் இணைக்கும். தினசரி சுமார் 40,000 பயணிகளை கையாளும் வகையில் இந்த சேவை திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது Causeway வழியாக தினமும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயணம் செய்து வரும் நிலையில், RTS Link தொடங்கப்பட்ட பிறகு எல்லை கடக்கும் பயண நேரத்தை குறைப்பதில் இந்த புதிய வசதிகள் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடிநுழைவு சோதனையை நொடிகளில் முடிக்கும் வசதியுடன், ஜோகூர் பாரு-சிங்கப்பூர் பயணத்தில் RTS Link புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.