சிங்கப்பூர்: சிங்கப்பூரின் வெஸ்ட் கோஸ்ட் அவென்யூ பகுதியில் தலைக்கவசம் அணியாமல் விதிமுறைகளை மீறி சைக்கிள் ஓட்டியதாகக் கூறப்படும் 10க்கும் மேற்பட்ட பதின்ம வயதினரை போக்குவரத்துக் காவல்துறையினர் விரட்டிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியான காணொளியில், பதின்ம வயதினர் சிலர் ‘ஃபிக்ஸி’ ரக சைக்கிள்களில் தலைக்கவசம் அணியாமல் வெஸ்ட் கோஸ்ட் அவென்யூ பகுதியில் சென்றது பதிவாகியுள்ளது.
அவர்கள் சாலையின் மூன்று தடங்களில் பிரிந்து சைக்கிள்களை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதைக் கவனித்த போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் சைரன் எழுப்பியபடி அவர்களைப் பின்தொடர்ந்துள்ளனர்.
சைக்கிள்களை நிறுத்துமாறு அதிகாரிகள் எச்சரித்தபோதிலும், சிலர் தப்பிச் செல்லும் நோக்கில் வேகமாகச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஃபிக்ஸி’ ரக சைக்கிள்களில் கையினால் இயக்கப்படும் வேகத்தடைக் கருவி (பிரேக்) இல்லாததாகவும் காணொளியில் தெரிகிறது. இறுதியில் எத்தனை பேர் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும், காணொளியின் முடிவில் சாலையோரத்தில் காவல்துறை அதிகாரிகள் இருவரும் அவர்களுக்குப் பின்னால் சில சைக்கிளோட்டிகளும் காணப்படுகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, காவல்துறையினரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றது குறித்து சிலர் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் சாலையில் சைக்கிள் ஓட்டும்போது தலைக்கவசம் அணிவது கட்டாயம். அதேபோல், சாலையில் சைக்கிள்களை ஒற்றை வரிசையில் மட்டுமே ஓட்ட வேண்டும் என விதிமுறைகள் உள்ளன.