வீட்டில் முதலாளி இல்லாத நேரத்தில் கைவரிசை காட்டிய பணிப்பெண்..! சிக்கியது எப்படி?

வீட்டில் முதலாளி இல்லாத நேரத்தில் கைவரிசை காட்டிய பணிப்பெண்..! சிக்கியது எப்படி?

சிங்கப்பூரில் தனது முதலாளியின் பாதுகாப்பான பெட்டகத்தில் இருந்து, பல தவணைகளாக பண மற்றும் நகைகளை திருடி பிலிப்பைன்ஸில் உள்ள தனது சொந்த ஊரில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், கார்கள் மற்றும் நிலம் வாங்கிய 47 வயது பெண்ணுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.

இது குறித்த நீதிமன்ற விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் ரகுயிண்டின் ஆல்மா பாசிக் என்ற 47 வயதுடைய பெண்மணி.

இவர் பாதிக்கப்பட்ட 54 வயது சிங்கப்பூர் பெண்மணியின் வீட்டில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.

முதலாளியின் முழு நம்பிக்கையை பெற்றிருந்ததால் வீட்டின் அனைத்து அறைகளுக்கும் இவர் தடையின்றி சென்று வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அப்பெண், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக முதலாளி வீட்டில் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, அவரது பெட்டகத்திலிருந்து ரொக்கப் பணம் மற்றும் விலை மதிப்பற்ற நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக திருடி வந்துள்ளார்.

திருடிய பணத்தை ரகசியமாக தனது சொந்த நாடான பிலிப்பைன்ஸ்க்கு அனுப்பி, அங்கு சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள், கார்கள் மற்றும் விவசாய நிலங்களை வாங்கியுள்ளார்.

பெட்டகத்தில் இருந்த பணம் தொடர்ந்து குறைவதை கவனித்த அந்த முதலாளி, அறையில் ரகசிய கண்காணிப்புக் கேமராவை பொருத்தியுள்ளார். அதில் பெட்டகத்தை திறந்து திருடுவது கட்சிதமாக பதிவானதை அடுத்து முதலாளி போலீசில் புகார் அளித்துள்ளார்.


திருடப்பட்ட பணம் மற்றும் நகைகளின் மொத்த மதிப்பு $2,17,000 க்கும் அதிகமாகும். துரதிஷ்டவசமாக திருடப்பட்ட சொத்துக்கள் எதையும் சிங்கப்பூர் அதிகாரிகளால் இன்னும் மீட்டெடுக்க முடியவில்லை.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி கூ ஜி சுவான் குற்றம் சாட்டப்பட்டவர் தனது முதலாளியின் நம்பிக்கையை மிகக் கொடூரமாக பயன்படுத்தி உள்ளார். திருடப்பட்ட தொகையின் அளவு மிகப்பெரியது. எனவே இது போன்ற குற்றங்களுக்கு முன்னுதாரணமான கடுமையான தண்டனை அவசியம் எனக்கூறி, ஊழியர் மூலமாக திருடப்பட்ட குற்றத்திற்காக அவருக்கு 38 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.