HDB நிதி கணக்கீட்டில் கண்டறியப்பட்ட
பிழை – அமைச்சகம் கொடுத்த விளக்கம்..!!
சிங்கப்பூர்: தேசிய மேம்பாட்டு அமைச்சகம், 18 நகராட்சி மன்றங்களுக்கு சேவை மற்றும் இதர இயக்க கொடுப்பனவுகளுக்காக ஒருமுறை சரிசெய்தல் மானியமாக $1.8 மில்லியன் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்ட அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
HDB அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப் பகுதிகளை நிர்வகித்தல் மற்றும் பராமரித்தல் உள்ளிட்ட நகர சபைகளின் செயல்பாடுகளை ஆதரிக்க, ஆண்டுதோறும் $280 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படுவதாக அமைச்சகம் விளக்கியுள்ளது. இருப்பினும், 2011 முதல் 2024 வரையிலான நிதியாண்டுகளில், வருடாந்திர ஒதுக்கீட்டு கணக்கீட்டில் ஏற்பட்ட கணினிப் பிழை காரணமாக சில நகர சபைகளுக்கு குறைவான நிதி வழங்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் பிழையின் விளைவாக, ஒவ்வொரு நகராட்சிக்கும் கிடைக்க வேண்டிய தொகை $22,000 முதல் $383,000 வரை குறைக்கப்பட்டிருந்தது. கடந்த 14 ஆண்டுகளில் நகர சபைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த நிதியில் இந்தக் குறைப்பு சுமார் 0.09 சதவீதம் மட்டுமே என்பதால், நகர சபைகளின் தினசரி செயல்பாடுகளில் பெரிய தாக்கம் ஏற்படவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த கணினிப் பிழையை வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் தனது உள் நிதி மதிப்பாய்வின் போது கண்டறிந்ததாகவும், அதனைத் தொடர்ந்து தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இனிமேல் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, நிதி கணக்கீட்டு முறையில் கடுமையான அமைப்பு சோதனைகள், சரிபார்ப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட நகராட்சிகளுக்கு வழங்க வேண்டிய மானியத் தொகைகள், தேசிய மேம்பாட்டு அமைச்சகமும் HDB-யும் வட்டியுடன் சேர்த்து, அடுத்த மாதம் 31ஆம் தேதிக்குள் முழுமையாக செலுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.