நோயாளி பராமரிப்பு இனி சுலபம்...!! வந்துவிட்டது ஸ்மார்ட் சக்கர நாற்காலிகள்...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் கூ டெக் புவாட் மருத்துவமனை, நோயாளிகளின் பராமரிப்பை எளிமைப்படுத்தும் வகையில் ஸ்மார்ட் தன்னாட்சி சக்கர நாற்காலி திட்டத்தை முன்னோட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நவீன முயற்சியின் மூலம், ஒரே நேரத்தில் ஒரு பராமரிப்பாளர் குறைந்தது இரண்டு நோயாளிகளுக்கு உதவி செய்ய முடியும். இது போக்குவரத்து செயல்திறனை இரட்டிப்பாக்கும் என்றும், ஒட்டுமொத்த எஸ்கார்ட் நேரத்தை 25% குறைக்கும் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஒரு நோயாளி ஸ்மார்ட் சக்கர நாற்காலியில் அமரும்போது, செவிலியர் அவர்களின் இருக்கை பெல்ட்களை சரிபார்த்து வழிமுறைகளை வழங்குவார். பராமரிப்பாளர் ஒரே நேரத்தில் ஒரு நிலையான சக்கர நாற்காலியையும் தள்ளுவார், இது வயதான பராமரிப்பாளர்களின் உடல் அழுத்தத்தையும் காய அபாயத்தையும் குறைக்கும்.
மருத்துவமனை பராமரிப்பாளர் காய் செங்போ, “இந்த தன்னாட்சி சக்கர நாற்காலி நீண்ட பயணங்களில் மிகவும் உதவியாக இருக்கும். நெரிசலான இடங்களிலும், லிஃப்ட்களிலும் செல்லும் போது இது பராமரிப்பாளர்களின் சிரமத்தை குறைக்கிறது” எனக் கூறினார்.
கடந்த மாதம் தொடங்கிய இந்த திட்டத்தில், தற்போது மூன்று ஸ்மார்ட் சக்கர நாற்காலிகள் அவசர சிகிச்சைப் பிரிவு, மருந்தகம் மற்றும் லாபி ஆகிய வழித்தடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் சென்சார்கள் மற்றும் லிடார் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளதால், சுற்றுப்புறங்களை தானாகக் கண்டறிந்து பாதுகாப்பாக நகர முடியும்.
மருத்துவமனையின் புதுமை மற்றும் மேம்பாட்டு இயக்குநர் ஜெங் யுஹோங்,“நோயாளி பாதுகாப்பே முக்கியம்,சக்கர நாற்காலிகள் பயன்பாட்டில் இருக்கும் போது அருகிலுள்ளவர்களுக்கு இசை குறிப்புகள் மூலம் எச்சரிக்கை அளிக்கும் சோதனைகளையும் நடத்தி வருகிறோம்,தேவையெனில் ஊழியர்கள் உடனிருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டார்.
மருத்துவமனை முழுவதும் இந்த சக்கர நாற்காலிகள் அறிமுகப்படுத்தப்படுமா என்பது நோயாளி பாதுகாப்பு, ஊழியர் திருப்தி, செயல்திறன் மற்றும் செலவுக் கணக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். திட்டம் வெற்றியடைந்தால், மற்ற மருத்துவமனைகளுடனும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு ஸ்மார்ட் சுகாதார பராமரிப்பை விரிவாக்க திட்டமிட்டுள்ளது.