ஆங் மோ கியோவில் சாலை விபத்து..!! போக்குவரத்து விதி மீறலால் நேர்ந்த சோகம்..!!
சிங்கப்பூர் : ஆங் மோ கியோவில், சிவப்பு விளக்கை மீறி சென்ற கார், சாலையைக் கடந்து மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த ஒரு சிறுவன் மீது மோதியதில் அங்கு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.
SGRoad Vigilante SGRV என்ற Youtube பக்கத்தில் பதிவிட்ட ஒரு காணொளியில், நேற்று (ஏப்ரல் 29) பிற்பகல் 2:30 மணியளவில் ஆங் மோ கியோ அவென்யூ 5-ல் இந்த சாலை விபத்து நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.
அந்தக் காணொளியில், சம்பவம் நடந்த போது போக்குவரத்து விளக்கு சிவப்பாக இருந்து உள்ளது.இப்போது திடீரென சிவப்பு விளக்கை மீறி கடந்து சென்ற அடர் நிற கார் ஒன்று சாலையைக் கடந்த மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த சிறுவன் மீது மோதியது தெரிகிறது.
மிதிவண்டி மீது மோதியதில் அந்த சிறுவன் மிதிவண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டு தரையில் விழுவதும் அந்த காணொளியில் நன்றாக தெரிகிறது.
சிறுவனுக்கு பின்னால் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த ஒரு பெண் இதை கண்டு உடனடியாக தனது மிதிவண்டியை நிறுத்தி, தன்னுடன் இருந்த குழந்தையைப் பற்றி கவலைப்படாமல் அதை சாலையோரத்தில் தனியாக விட்டுவிட்டு, கீழே விழுந்த அந்த சிறுவனுக்கு உதவ அவர் சாலைக்கு வந்துள்ளார்.
அந்த காணொளியில் மிகவும் பயந்து போய் நிற்க முடியாமல் இருக்கும் அந்த சிறுவனைக் கட்டுமான தொழிலாளிகள் உடை அணிந்த ஒருவர் தூக்கிச் சென்று சாலையோரம் கொண்டு செல்வது போல் தெரிகிறது.
அதே நேரத்தில் கார் ஓட்டுநர் நிலைமையைச் சரி செய்ய காரை விட்டு வெளியே இறங்கியதும், கார் ஓட்டுநரை நோக்கி உதவி செய்ய வந்த அந்த பெண் செல்வது தெரிவதோடு அந்த காணொளி முடிவடைந்துவிட்டது.
இந்த விபத்து குறித்து சிங்கப்பூர் காவல்துறையினர் கூறியதாவது: விபத்தில் அடிபட்டுள்ள 9 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சைக்காக சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக கூறியுள்ளனர்.
மேலும் பிறருக்கு காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காகவும், போக்குவரத்து விதியை மீறியதற்காகவும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும் 74 வயதுடைய கார் ஓட்டுநரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனை கேகே பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் (SCDF)தெரிவித்துள்ளனர்.