மறுநாள் அந்த மோதிரத்தை திரும்ப பெற்ற மோதிரத்தின் உரிமையாளர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அந்தப் பெண் அந்த மோதிரத்தை மீண்டும் பார்த்தபோது உடனடியாக கண்ணீர் விட்டு அழுததாகவும், அந்த மோதிரம் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை என்னால் அந்த நொடி உணர முடிந்தது எனவும் பேருந்து ஓட்டுநரான ஜாங் லைஃபா கூறியுள்ளார்.
பயணிகள் தங்களது உடைமைகளை எதையும் விட்டு செல்லவில்லை என்பதை உறுதி செய்வதற்காக பேருந்து ஓட்டுநர் ரிட்ஜ் முனையத்தில் வழக்கமான சோதனைக்காக பேருந்து நிறுத்தியதாக SBS டிரான்சிட் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது.
அப்போது ஓட்டுநர் அந்த தரையிலிருந்து ஒரு வைர மோதித்தை கண்டெடுத்துள்ளார். அந்த மோதிரம் அதன் உரிமையாளருக்கு மிகவும் உணர்வுபூர்வமான ஒன்று என்பதைக் கருத்தில் கொண்டு உடனடியாக அது குறித்து புகார் அளித்து, அதனை பாதுகாப்பாக மேற்பார்வையாளரிடம் ஒப்படைத்திருக்கிறார்.
மறுநாள் காலை ஒரு பெண் பயணி மோதிரம் பற்றி விசாரிப்பதற்காக நிறுவனத்தின் தொலைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொண்டபோது மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டது தெரிந்து அப்பெண் பெருமூச்சு விட்டிருக்கிறார்.
அங்கு மோதிரத்தைப் பெற்றுக்கொள்ள பெண் சென்றபோது நிம்மதியும் நன்றியுணர்வும் ஒருங்கே கொண்ட அவர் மிகவும் நெகிழ்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
SBS டிரான்சிட் ஒரு பதிவில் அந்த பேருந்து ஓட்டுநருக்கு நன்றியை தெரிவித்துள்ளது. அந்த மோதிரத்தின் மதிப்பு ஆயிரக்கணக்கான டாலர்களாகக இருக்கலாம் என்றாலும், அவர் வெளிப்படுத்திய நேர்மை, பரிவு மற்றும் பொறுப்புணர்வு ஆகியவை விலை மதிப்பற்றவை என்றும் ஓட்டுநரை புகழ்ந்துள்ளது.