இணையத்தில் சூடு பிடிக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் பணிநீக்க விவகாரம்..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் புதிதாக பணியில் சேர்ந்த ஒரு சீனப் பெண், ஹோட்டல் விஐபி லவுஞ்சில் இருந்து சில தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் சென்றதற்காக வேலைக்குச் சேர்ந்த அடுத்த நாளே எச்சரிக்கை இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.
சியாஹோங்ஷு தளத்தில் கோகோ சாஸ் என்ற பெயரில் பதிவிட்ட அந்தப் பெண், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்ணாகப் பணிபுரிவது தனது நீண்டநாள் கனவு என கூறினார். அதற்காக அவர் ஒரு வருடம் ஆங்கிலப் பயிற்சி மற்றும் விமானப் போக்குவரத்து தொடர்பான பாடங்களை கற்றுக்கொண்டதாகவும், நேர்காணலில் தேர்ச்சி பெற்று சலுகைக் கடிதமும் பெற்றதாகவும் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது,சிங்கப்பூருக்கு வந்ததும் வீடு வாடகை,மருத்துவ பரிசோதனை, ஆன்போர்டிங் நடைமுறை உள்ளிட்டவற்றுக்காக மொத்தம் S$10,973 செலவிட்டார். ஆனால் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே,ஹோட்டலில் உள்ள விஐபி லவுஞ்சில் சுயசேவையாக தண்ணீர் பாட்டில்கள் இருந்ததைத் தவறாக புரிந்துகொண்டு சில பாட்டில்களை எடுத்துக்கொண்டார்.அடுத்த நாள், “நிறுவன விதிகளை மீறியதாக” மனிதவளத் துறையால் அழைக்கப்பட்டு, எந்த விளக்கமும் அளிக்க முடியாத நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறினார்.
“அறைக்குள் மொபைல் சாதனங்களும் அனுமதிக்கப்படவில்லை. எந்த பேச்சுவார்த்தையும் இன்றி நேரடியாக பணிநீக்க அறிவிப்பைக் கொடுத்தார்கள்,”என அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர், “தற்போதைய அல்லது முன்னாள் ஊழியர்கள் தொடர்பான ரகசிய விவகாரங்களில் கருத்து தெரிவிக்க மாட்டோம்” என கூறியது.மேலும், “அனைத்து ஊழியர்களும் நிறுவனக் கொள்கைகள் மற்றும் சட்டங்களுக்கு இணங்க தொழில்முறையாக நடந்து கொள்ள வேண்டும். ஏதேனும் விதிமீறல் நடந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் கூறப்பட்டது.