மணிலா – சிங்கப்பூர் விமானத்தில் திடீர் அதிர்வு..!! விமானப் பணிப்பெண்ணுக்குக் கணுக்காலில் முறிவு!

மணிலா – சிங்கப்பூர் விமானத்தில் திடீர் அதிர்வு..!! விமானப் பணிப்பெண்ணுக்குக் கணுக்காலில் முறிவு!

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானம் திடீர் அதிர்வுக்கு உள்ளானதில், விமானப் பணிப்பெண் ஒருவரின் வலது கணுக்காலில் முறிவு ஏற்பட்டது. மேலும் நான்கு விமானப் பணியாளர்கள் லேசான காயங்களுக்கு உள்ளாகினர்.

கடந்த 2025 நவம்பர் 14ஆம் தேதி, ‘SQ919’ என்ற விமானம் இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டது. ஏர்பஸ் A350-900 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம், சுமார் 40,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தின் வானிலை ரேடாரில் முன்னால் புயல் மேகங்கள் இருப்பது தெரியவந்தது.

அந்த மேகங்கள் சுமார் 30,000 அடி உயரத்தில் இருந்ததால், விமானிகள் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பான இடைவெளியைவிட அதிக உயரத்தில் விமானத்தைச் செலுத்தினர். இருப்பினும், முன்னெச்சரிக்கையாகப் பயணிகள் இருக்கை வார்ப்பட்டையை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

பின்னர், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தலின்படி விமானம் உயரத்தைக் குறைக்கத் தொடங்கியது. சுமார் 38,450 அடி உயரத்தில் இருந்தபோது, விமானம் திடீரெனப் பலத்த அதிர்வுக்கு உள்ளானது. புயல் மேகங்களுக்கு மேலே பறந்தபோதிலும் இந்த அதிர்வு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இருக்கை வார்ப்பட்டையை அணியுமாறு அறிவுறுத்தியதுடன், விமானத்தை மெதுவாகக் கீழிறக்கியபோதும் அதிர்வைத் தவிர்க்க முடியவில்லை என விசாரணை அறிக்கை தெரிவித்தது.

சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சின்கீழ் செயல்படும் போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணைப் பிரிவு, அக்டோபர் 5ஆம் தேதி இந்தச் சம்பவம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டது.

இடிமின்னல் உள்ளிட்ட வானிலை மாற்றங்களால் ஏற்படும் அதிர்வுகள், ரேடாரில் தெரியும் புயல் மேகங்களின் எல்லைக்கு அப்பாலும் பரவக்கூடும் என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுவதாக அறிக்கை குறிப்பிட்டது.

விமானம் 2025 நவம்பர் 14ஆம் தேதி இரவு 8.41 மணிக்குச் சிங்கப்பூரில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. காயமடைந்த பணிப்பெண் தற்போது மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், 2004 முதல் 2025 வரை சிங்கப்பூரில் பதிவான விமானங்களை உள்ளடக்கிய குறைந்தது 11 அதிர்வுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக விசாரணைப் பிரிவின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.