சிங்கப்பூரின் அடையாளமாக மாறிய முகவரி...!! எது தெரியுமா..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பிரதமர் லீ குவான் யூவின் முன்னாள் இல்லமான 38 ஆக்ஸ்லி சாலையில் உள்ள இடம், தேசிய நினைவுச்சின்னமாக நியமிக்கும் அரசாங்கத்தின் நோக்கம் குறித்து மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
1950 முதல் 2015 வரை மறைந்த ஸ்தாபகப் பிரதமர் லீ குவான் யூவின் இல்லம் மட்டுமல்ல, சிங்கப்பூர் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரத்திற்கு மாறியதற்குச் சாட்சியமான வரலாற்று தளமாகும்.
அந்த இடத்தை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கும் பாதுகாப்பு உத்தரவை அரசாங்கம் பிறப்பிக்க திட்டமிட்டுள்ளதாக தேசிய பாரம்பரிய வாரியமும் சிங்கப்பூர் நில ஆணையமும் அறிவித்துள்ளன.
அறிக்கையில் கூறப்படுவதாவது, 1950களில் லீ குவான் யூ பல தொழிலாளர் சங்கங்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்களுக்கு சட்ட மற்றும் அரசியல் உதவிகளை வழங்கினார். 1951ல் அப்துல் சமத் இஸ்மாயில் கைது, 1952ல் அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம், 1954ல் தேசிய சேவை கலவரம் ஆகிய நிகழ்வுகளில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
அந்த காலத்தில் உதவி கேட்டவர்களில் பலர் பின்னர் சிங்கப்பூர் சுதந்திர இயக்கத்தின் முக்கிய நபர்களாக மாறினர்.1953 முதல் லீ குவான் யூ, கோ கெங் ஸ்வீ, தோ சின் சாய், எஸ். ராஜரத்தினம், கே.எம். பைர்ன் ஆகியோர் 38 ஆக்ஸ்லி சாலையில் உள்ள வீட்டின் அடித்தளத்தில் புதிய அரசியல் கட்சி உருவாக்கம் குறித்து ரகசியக் கூட்டங்கள் நடத்தியுள்ளனர்.
அவ்வாறு உருவான மக்கள் செயல் கட்சி (PAP) 1954ல் தனது முதல் தலைமையகத்தை இதே 38 ஆக்ஸ்லி சாலையில் அமைத்தது. 1959 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டை சுயராஜ்யத்தின் பாதையில் இட்டுச் சென்றது.
38 ஆக்ஸ்லி சாலையுடன் இணைந்த நிகழ்வுகள் சிங்கப்பூரின் வரலாற்று வளர்ச்சியில் தனித்துவமான முக்கியத்துவம் வாய்ந்தவை. அதன் எளிய தோற்றம் இருந்தாலும், அது ஸ்தாபக தலைமுறை தலைவர்களின் சிக்கனம், நடைமுறைவாதம் மற்றும் ஒழுக்கத்தை பிரதிபலிக்கிறது.
ஒரு வரலாற்றுத் தளமாக, 38 ஆக்ஸ்லி சாலை சிங்கப்பூரர்களின் தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைகள் தங்கள் முன்னோர்கள் எடுத்த தீர்மானங்களை நினைவு கூரவும், நாட்டின் விதியை வடிவமைத்த மதிப்புகளைப் புரிந்துகொள்ளவும் வழிவகுக்கும் இடமாக விளங்கும் என்று கூறப்படுகிறது.