செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு அரசின் முழு ஆதரவு..!!!
சிங்கப்பூர்: செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டில் முன்னேற்றம் கண்டுவரும் சிங்கப்பூர், இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை அளவிலான AI பயன்பாட்டை ஊக்குவிக்கும் புதிய முயற்சிகளை அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் Lawrence Wong இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர், இந்த முயற்சிகள் “மிகச் சரியான நேரத்தில் எடுத்த முடிவுகள்” என்று குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியுடன் பதிப்புரிமை பிரச்சினைகள், வன்போலிகள் (deepfakes) போன்ற சவால்களும் உருவாகலாம் என அவர் எச்சரித்தார். அவற்றை கவனமாக கையாள வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
AI பயன்படுத்த விரும்பும் வணிகங்களுக்கு வழங்கப்படும் ஆதரவையும் அவர் பாராட்டினார். அதேவேளை, உலகளாவிய பாதுகாப்பே இவ்வாண்டு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும், பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள சிங்கப்பூர் தனித்து நிற்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கிடையில், சிங்கப்பூர் ஊழியரணி மற்றும் SkillsFuture Singapore ஆகியவை ஒரே அமைப்பாக இணையும் முயற்சியை வெஸ்ட் கோஸ்ட் – ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக். வரவேற்றார்.
ஊழியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், புதிய திறன்களைப் பெறவும் அதிக வாய்ப்புகள் உருவாகும் என்றார். குறிப்பாக, ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ திட்டத்தின் விரிவாக்கம் மூலம் ஊழியர்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவுத் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வழி வகுக்கும் என்றும் தெரிவித்தார்.
“செயற்கை நுண்ணறிவு மனிதர்களை மாற்றுவதற்கல்ல,மாறாக சாதாரண பணிகளை எளிதாக்கி மொத்தப் பணிச்சுமையை வலுப்படுத்துவதற்கே பயன்படுத்தப்பட வேண்டும்,” என்றார் அவர்.
மேலும், நாட்டை முன்னேற்றுவது ஒரு தலைமுறையினரின் பொறுப்பு மட்டுமல்ல, மாறாக அனைத்து சிங்கப்பூரர்களின் ஒருங்கிணைந்த முயற்சியே நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம் என பிரதமர் வோங் தமது உரையில் வலியுறுத்தியிருந்தார்.