விதிமுறைகளை மீறிய பயணம் நிறுவனம்..!!STB எடுத்த கடும் நடவடிக்கை..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தேவையான நிதி ஆவணங்களை உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்கத் தவறிய காரணத்தால், உள்ளூர் பயண நிறுவனமான சன்ஷைன் டூர்ஸ் & டிராவல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமம் உடனடியாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) வெளியிட்ட அறிவிப்பின்படி, தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் மற்றும் வருடாந்திர வணிக மேலோட்ட அறிக்கையை நிறுவனம் சட்டப்படி சமர்ப்பிக்கவில்லை. பயண முகவர்கள் கட்டளைச் சட்டம் 2017-ன் படி, உரிமம் பெற்ற பயண நிறுவனங்கள் நிதியாண்டு முடிந்த ஆறு மாதங்களுக்குள் இந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விதிமுறைகள் பின்பற்றப்படாததால் உரிமம் இடைநிறுத்தப்பட்டதாக STB தெரிவித்துள்ளது. தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் வரை அல்லது அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை இந்த இடைநிறுத்தம் அமலில் இருக்கும்.
இந்த காலகட்டத்தில் நிறுவனம் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை தொடரலாம்.ஆனால் புதிய பயண ஆர்டர்களை ஏற்றுக்கொள்ள அனுமதி இல்லை.சுற்றுலா துறையின் நம்பகத்தன்மையை பாதுகாக்க விதிமீறல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றும் STB எச்சரித்துள்ளது.