சிங்கப்பூரில் காணாமல் போன இரண்டு டீனேஜ் சிறுமிகள் மீட்பு..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கிட்டத்தட்ட நான்கு நாட்களாக குடும்பங்களிடமிருந்து காணாமல் போன 13 வயது ஆம்பர் லிம் என் மற்றும் 14 வயது கேட்லின் லிம் வென் சின் ஆகிய இரு டீனேஜ் சிறுமிகளும் 02.01.25 அன்று பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் பெற்றோர்–பிள்ளைகள் இடையிலான புரிதல் மற்றும் தனியுரிமை குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நான்யாங் சுற்றுப்புற காவல் நிலையத்தில் மகளைச் சந்தித்தபோது,14 வயது கேட்லின் இன்னும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் இருந்ததாக அவரது தாய் சூ சுன்மெய் தெரிவித்தார். இருப்பினும், குடும்பத்தினர் தனியாக பேசிய பிறகு,தனது மகள் வீட்டை விட்டு வெளியேறியதற்கான உண்மையான காரணத்தை புரிந்துகொண்டதாக அவர் கூறினார். தொடர்ந்து இருப்பிடத்தை கண்காணித்ததும், தனியுரிமை மீறப்பட்ட உணர்வும், மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக மகள் தெரிவித்ததாக அவர் விளக்கினார்.
முன்னதாக, மகள் வெளியே செல்லும் போதெல்லாம் “Find My iPhone” செயலி மூலம் இருப்பிடத்தை பகிர்ந்துகொள்ளச் செய்ததாகவும், இதனால் தாய்–மகள் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும் சூ சுன்மெய் கூறினார். 24 மணி நேரத்திற்கும் மேலாக மகள் வீடு திரும்பாதது மூன்றாவது முறை என்றாலும், இவ்வளவு நாட்கள் காணாமல் போனது இதுவே முதல் முறை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில்,13 வயது ஆம்பர் லிம் எனின் தந்தை லிம் வெய்-லி,தனது மகளின் நண்பர்களிடம் பேசியபோது, ஆம்பர் சில நண்பர்களுடன் இருந்ததாக தெரிய வந்ததாக முன்பு தெரிவித்திருந்தது.இரு சிறுமிகளும் நாடு முழுவதும் இடம் மாறி நடந்துச் சென்றதும், சில இரவுகளில் வெளியில் தங்கியிருந்ததும் குடும்பத்தினருக்கு பின்னர் தெரியவந்தது.
இந்த அனுபவம் குடும்பத்தினருக்கு பெரிய பாடமாக அமைந்துள்ளதாக சூ சுன்மெய் கூறினார். “எங்கள் தலைமுறையின் வளர்ப்பு முறை இன்றைய தலைமுறைக்கு பொருந்தாமல் போகலாம். இனி மகளின் கருத்துகளை கேட்டு, அவளே தனது முடிவுகளை எடுக்க அனுமதிப்போம்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம், இளம் வயதினரின் மனநிலையை புரிந்துகொண்டு, உரையாடல் மற்றும் நம்பிக்கையின் மூலம் குடும்ப உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.