சிங்கப்பூர் உணவங்காடியில் பயங்கர மோதல்! கஞ்சியை ஒருவர் மீது ஒருவர் வீசியதால் பரபரப்பு!

சிங்கப்பூரில் உணவங்காடியில் அமர்ந்து சாப்பிடுவதற்கான இருக்கை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், இருதரப்பினரும் உணவுப் பொருட்களையும் பானங்களையும் ஒருவர் மீது ஒருவர் வீசும் அளவுக்குச் சென்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் மூச்சுத்திணறலுக்கு ஆளான பெண் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சிங்கப்பூரின் ஹெய்க் ரோடு சந்தை மற்றும் உணவங்காடியில் (Haig Road Market and Food Centre) ஜூன் 3ஆம் தேதி காலை சுமார் 10:10 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அங்கு உணவு வாங்கி சாப்பிடுவதற்காக வந்த பெண் ஒருவர், ஏற்கெனவே ஓர் ஆண் அமர்ந்திருந்த மேசைக்கு எதிரே அமர்ந்துள்ளார்.
இதனால் அதிருப்தியடைந்த அந்த ஆண், பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி உணவுப் பொருட்களையும் பானங்களையும் வீசியதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். பெண் வாங்கிய கஞ்சியும் இந்த மோதலின்போது வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணின் கணவர், உணவங்காடிக்கு அருகில் பை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். அப்போது அவர் அருகிலிருந்தபோது, மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.
அங்கு தனது மனைவியுடன் ஒருவர் தகராறில் ஈடுபடுவதைக் கண்ட அவர் கடும் கோபமடைந்துள்ளார். இருப்பினும், கைகலப்பில் ஈடுபடாமல் நிதானத்தைக் கடைப்பிடித்து காவல்துறையைத் தொடர்புகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினரும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் பெண் ஒருவர் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே ஆஸ்துமா பாதிப்பு இருந்ததாகவும், ஏற்பட்ட தகராறால் அதிர்ச்சியடைந்த அவர் மூச்சுவிடுவதில் சிரமத்தை எதிர்கொண்டதாகவும் அவரது கணவர் கூறியுள்ளார்.
அப்பகுதியில் இருந்த உணவுக் கடை உரிமையாளர் ஒருவர், இந்தச் சம்பவத்தில் இருதரப்பினருக்கும் பொறுப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பெண் தனது கடையைப் பார்த்துக்கொள்வதற்காக உணவங்காடிக்கும் வெளியேயும் சென்று வந்ததால், அதனால் ஏற்பட்ட அதிருப்தி வாக்குவாதத்துக்குக் காரணமாகியிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது மனைவியுடன் சேர்ந்து அந்தப் பகுதியில் கடை நடத்தத் தொடங்கி இரண்டு வாரங்களே ஆகியிருந்த நிலையில், இத்தகைய சம்பவத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகப் பெண்ணின் கணவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தைக் கவனித்துக்கொண்டு தொடர்ந்து தொழில் நடத்த வேண்டியிருப்பதால், கோபத்தை அடக்கிக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொதுவான இடங்களில் இருக்கைகளைப் பகிர்ந்துகொள்வது போன்ற சிறிய விஷயங்களிலும் பொறுமையுடனும் பரஸ்பர மரியாதையுடனும் நடந்துகொள்வது அவசியம் என்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டுகிறது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
