சிங்கப்பூரில் iPhone பயனர்களுக்கு எச்சரிக்கை! iMessage மூலம் S$31,000 மோசடி..காவல்துறை அறிவுறுத்தல்!

சிங்கப்பூரில் Apple நிறுவனத்தின் iMessage சேவையைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த மோசடிகள் தொடர்பாக கடந்த அக்டோபர் 31ஆம் தேதி முதல் சுமார் இரண்டு வாரங்களில் குறைந்தது S$31,000 இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள், பிரபலமான பார்சல் விநியோக நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி iMessage வழியாகப் போலியான குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர்.
அந்தச் செய்திகளில், பார்சல் விநியோகத்திற்குத் தேவையான முகவரி அல்லது தகவல்கள் முழுமையாக இல்லை என்றும், இதனால் பார்சல் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. பின்னர், விநியோகத்தைத் தொடர இணைப்பைக் கிளிக் செய்து தேவையான தகவல்களைப் புதுப்பிக்குமாறு பெறுநர்களிடம் தெரிவிக்கப்படுகிறது.
அந்த இணைப்புகள் உண்மையான நிறுவனங்களின் இணையதளங்களைப் போலவே வடிவமைக்கப்பட்ட போலி இணையதளங்களுக்குக் கொண்டு செல்கின்றன. அவற்றின் மூலம் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் கடன் அட்டைத் தகவல்களைப் பெற மோசடிக்காரர்கள் முயற்சிக்கின்றனர்.
கூரியர் நிறுவனங்கள் மட்டுமின்றி, சிங்கப்பூர் சுகாதாரக் குழுமத்தின் (SingHealth Polyclinics) பெயரையும் மோசடிக்காரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பெறுநர்களுக்கு அனுப்பப்படும் போலிச் செய்திகளில், அவர்களுக்குச் செலுத்தப்படாத வெளிநோயாளர் மருத்துவக் கட்டணம் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அந்தக் கட்டணத்தைச் செலுத்துவதற்காக ஒரு இணையதள இணைப்பும் வழங்கப்படுகிறது.
இதனை நம்பி இணைப்பைத் திறக்கும் பொதுமக்கள், போலியான இணையதளங்களுக்குத் திருப்பி விடப்படுகின்றனர். அங்கு தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவதுடன், பணம் செலுத்தவும் தூண்டப்படுகின்றனர்.
இதுபோன்ற சந்தேகத்திற்குரிய iMessage குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று சிங்கப்பூர் காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.
பார்சல் விநியோகம் தொடர்பான தகவல்கள் வந்தால், ScamShield செயலி அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், எந்தவொரு தகவலையும் வழங்குவதற்கு முன்போ அல்லது பணம் செலுத்துவதற்கு முன்போ சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அதன் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் மூலம் நேரடியாகத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்த வேண்டும்.
Apple சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் தங்களது iMessage அமைப்புகளில் ‘Filter Unknown Senders’ மற்றும் ‘Filter Spam’ ஆகிய பாதுகாப்பு வசதிகளைச் செயல்படுத்திக் கொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சந்தேகத்திற்குரிய செய்திகளை iMessage செயலியின் மூலமாகவே புகாரளிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு அம்சங்களைப் பெறுவதற்காகத் தங்களது சாதனங்களைப் புதிய மென்பொருள் பதிப்பிற்கு புதுப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மோசடி தொடர்பாகச் சந்தேகம் ஏற்பட்டால், 24 மணி நேரமும் செயல்படும் ScamShield உதவி எண்ணான 1799-ஐத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம்.
பொதுமக்கள் விழிப்புடன் செயல்படுவதன் மூலமும், தெரியாத நபர்களிடமிருந்து வரும் இணையதள இணைப்புகளை நம்பாமல் இருப்பதன் மூலமும் இதுபோன்ற இணைய மோசடிகளில் சிக்குவதைத் தவிர்க்க முடியும்.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
