இனி இ-சிகரெட் பயன்படுத்தினாலே கைது..? கடுமையாக்கப்படும் சட்ட நடவடிக்கை..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இ-சிகரெட்டுகள் மீது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நான்கு மாதங்களுக்குள், சிங்கப்பூரில் 3,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் இறுதி வரை, இ-சிகரெட்டுகளை வைத்திருந்தது மற்றும் பயன்படுத்தியதற்காக மொத்தம் 3,534 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகமும் சுகாதார அறிவியல் ஆணையமும் தெரிவித்துள்ளன.
இதில் 366 பேர் எட்டோமிடேட் கொண்ட இ-சிகரெட்டுகளை பயன்படுத்தியவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் 268 பேர் புகைபிடிப்பு நிறுத்தும் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் 211 பேர் எட்டோமிடேட் சிகரெட் வைத்திருந்தவர்கள், 57 பேர் மீண்டும் மீண்டும் குற்றம் செய்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய ஒழுங்குமுறை விதிகளின்படி, எட்டோமிடேட் கொண்ட இ-சிகரெட்டுகளை பயன்படுத்துவோர் கட்டாயமாக புகைபிடிப்பு நிறுத்தும் திட்டங்களில் பங்கேற்க வேண்டும். இதில் கலந்து கொள்ள தவறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 டிசம்பர் 31 நிலவரப்படி, எட்டு பேர் இந்த திட்டத்தை முழுமையாக முடித்துள்ளனர். இதில் ஏழு பேர் எட்டோமிடேட் இ-சிகரெட் வழக்குகள் தொடர்பானவர்கள். அதே நேரத்தில், தொடக்க சந்திப்புகளுக்கு வராத 15 பேரில் நான்கு பேருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இதே காலகட்டத்தில், எட்டோமிடேட் கொண்ட இ-சிகரெட்டுகளை கடத்தியதாக அல்லது விநியோகம் செய்ததாக 10 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடல், நிலம் மற்றும் வான் சோதனைச் சாவடிகளில் 51 பேர் பிடிபட்ட நிலையில், 41,000க்கும் மேற்பட்ட இ-சிகரெட்டுகள் மற்றும் அதன் பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஹாட்லைன் மற்றும் ஆன்லைன் வழியாக 4,300க்கும் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளன. சட்டவிரோத ஆன்லைன் விளம்பரங்கள், சமூக ஊடக பதிவுகள் மற்றும் டெலிகிராம் குழுக்கள் உள்ளிட்ட 1,000க்கும் மேற்பட்ட உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இ-சிகரெட்டுகளை விட்டு விட விரும்புவோர் தன்னார்வமாக உதவி பெறலாம் என்றும், அவர்கள் மீது எந்த தண்டனையோ குற்றப்பதிவோ விதிக்கப்படாது என்றும் அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர். QuitVape மற்றும் I Quit Smoking போன்ற திட்டங்களில் சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் இலவசமாக பங்கேற்கலாம்.