ஆண்டு இறுதிப் பள்ளி விடுமுறை: சிங்கப்பூர் – மலேசியா எல்லையில் காத்திருக்கும் போக்குவரத்து நெரிசல்!

ஆண்டு இறுதிப் பள்ளி விடுமுறை: சிங்கப்பூர் – மலேசியா எல்லையில் காத்திருக்கும் போக்குவரத்து நெரிசல்!

சிங்கப்பூர்: ஆண்டு இறுதிப் பள்ளி விடுமுறையை முன்னிட்டு, சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் (Woodlands), துவாஸ் (Tuas) நிலவழிச் சோதனைச் சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) எச்சரித்துள்ளது.

நவம்பர் 20ஆம் தேதி முதல் 2027ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி வரை பள்ளி விடுமுறைக் காலத்தில் அதிக அளவிலான பயணிகள் சிங்கப்பூர் – மலேசியா இடையே பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இரு சோதனைச் சாவடிகளிலும் நீண்ட வாகன வரிசைகளும் குடிநுழைவுச் சோதனைகளுக்காகக் காத்திருக்கும் நேரமும் அதிகரிக்கலாம்.

கடந்த நவம்பர் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரையிலான தீபாவளி நீண்ட வார இறுதியில், உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகள் வழியாக 20 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் கடந்து சென்றுள்ளனர்.

குறிப்பாக, நவம்பர் 6ஆம் தேதி ஒரே நாளில் 5,53,000க்கும் அதிகமானோர் குடிநுழைவுச் சோதனைகளைக் கடந்துள்ளனர். மலேசியாவிலிருந்து ஏற்பட்ட வாகனப் போக்குவரத்து நெரிசல் காரணமாக, உச்ச நேரங்களில் சிங்கப்பூரிலிருந்து காரில் வெளியேறிய பயணிகள் குடிநுழைவுச் சோதனைகளை முடிக்க மூன்று மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

தீபாவளி நீண்ட வார இறுதியின்போது உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்துக் கண்காணிப்பு நடவடிக்கையில், 11 ஓட்டுநர்கள் விதிமீறல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

இரட்டை வெள்ளைக் கோட்டைக் கடப்பது, அனுமதியின்றி வலதுபுறம் திரும்புவது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்துவது மற்றும் வாகன வரிசையில் இடையில் புகுவது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதில், ஆறு வாகன ஓட்டுநர்கள் திருப்பி அனுப்பப்பட்டு மீண்டும் வரிசையின் கடைசியில் இணையுமாறு அறிவுறுத்தப்பட்டனர். வெளிநாட்டுப் பதிவு கொண்ட வாகனங்களை ஓட்டிய மேலும் ஐந்து ஓட்டுநர்கள், விதிமீறல்கள் காரணமாக சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது.

மேலும், குடிநுழைவுச் சோதனையின்போது தவறான கடவுச்சீட்டு அல்லது QR குறியீட்டைக் காண்பிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ICA தெரிவித்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் ஜூலை மாதத்தில் 46ஆக இருந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் 74ஆக அதிகரித்துள்ளன. இதனால் பயணிகள் கூடுதல் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதுடன், சரியான ஆவணங்களைச் சமர்ப்பிக்காவிட்டால் பயணத்திற்குத் தாமதம் ஏற்படக்கூடும்.

பயணிகள் அதிகாலை அல்லது இரவு நேரம் போன்ற போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் நேரங்களில் பயணம் செய்யத் திட்டமிடுமாறு ICA அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு சோதனைச் சாவடிகளின் போக்குவரத்து நிலவரத்தைச் சரிபார்க்கவும், MyICA செயலி மூலம் உருவாக்கப்படும் QR குறியீடுகளைப் பயன்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

QR குறியீடு வழியிலான குடிநுழைவுச் சோதனை மற்றும் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்களுக்கான முக அடையாள அங்கீகாரம் உள்ளிட்ட புதிய நடைமுறைகளால், வெளியேறும் உச்ச நேரங்களில் குடிநுழைவுச் சோதனைகளைக் கையாளும் திறன் 35 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஒரு மணி நேரத்திற்கு கூடுதலாக 7,600 பயணிகளைக் கையாள முடிகிறது.

ஆகவே, ஆண்டு இறுதிப் பள்ளி விடுமுறையில் மலேசியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிடுபவர்கள் முன்கூட்டியே பயணத்தைத் திட்டமிடுவதுடன், தேவையான பயண ஆவணங்களையும் சரிபார்த்துக்கொள்வது அவசியமாகும்.