குடிபோதையில் கார் ஓட்டி சிக்கிய 41 பேர்..!! சிங்கப்பூர் காவல்துறை அதிரடி..!!
சிங்கப்பூர்: குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் 41 பேர் மீது நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 25) குற்றம் சாட்டப்பட உள்ளது. அவர்களில் மீண்டும் மீண்டும் குற்றம் செய்த 2 நபர்களும் அடங்குவர்.
இந்த ஆண்டு (2026) மார்ச் மாதம் முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த 41 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 68 வயதிற்கு உட்பட்டவர்கள். அவர்கள் அனைவருக்கும் மூச்சு பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்கள் மது போதையில் இருப்பது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்டவர்களில் 44 மற்றும் 48 வயதுடைய 2 நபர் இதற்கு முன்னர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக தண்டிக்கப்பட்டவர்கள். அவர்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும்.
29 முதல் 59 வயதுக்குட்பட்ட 3 நபர்கள் மது போதையில் சாலையிலே வாகனத்தை நிறுத்திவிட்டு காருக்குள்ளே தூங்கி உள்ளனர். இந்த செயலானது போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இருந்ததால் சாலை பயணிகளுக்கு அது ஆபத்தை ஏற்படுத்தியது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது மற்றும் மற்றவர்களுக்காக தேவையற்ற சிரமங்களை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டுகளுக்காக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட உள்ளது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது என்பது மிகவும் ஆபத்தான மற்றும் பொறுப்பாற்ற செயல் என காவல்துறை வலியுறுத்தி உள்ளது. அவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்களை அதிகாரிகள் எப்பொழுதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் எனவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக டாக்சி, தனியார் வாடகை கார், போக்குவரத்து மற்றும் நியமிக்கப்பட்ட ஓட்டுநர்கள் போன்ற மாற்றுப் போக்குவரத்து வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டி உள்ளது.