சிங்கப்பூரில் 200 பேரிடம் விசாரணை நடத்தும் காவல்துறை..!! பின்னணி என்ன..??
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மோசடி மற்றும் பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 200க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தற்போது காவல்துறையின் விசாரணையில் உள்ளனர். இந்த வழக்குகளில் 700க்கும் அதிகமான மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்கள் மொத்தமாக S$7.67 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை சந்தித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வணிக விவகாரத் துறை, ஏழு காவல் மாவட்டங்களைச் சேர்ந்த அமலாக்க அதிகாரிகளுடன் இணைந்து, ஜனவரி 16 முதல் 29 வரை நாடு முழுவதும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் போது 78 பெண்கள் மற்றும் 139 ஆண்கள் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டனர். இவர்களின் வயது 16 முதல் 83 வரை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் பெரும்பாலும் மின்னணு வணிக மோசடி, நண்பர்கள் அல்லது அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்தல், ஆட்சேர்ப்பு, முதலீடு மற்றும் வாடகை தொடர்பான மோசடிகளை உள்ளடக்கியவையாக உள்ளன.
கடந்த டிசம்பர் 30 முதல் அமலுக்கு வந்துள்ள சட்ட விதிகளின்படி, மோசடி செய்பவர்கள் மற்றும் மோசடி கும்பல்களுக்கு உதவுபவர்கள் 6 முதல் 24 வரை கட்டாய பிரம்படிகள் உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. பணமோசடியில் உதவுதல், சிம் கார்டுகளை வழங்குதல் அல்லது Singpass அடையாள விவரங்களை பகிர்தல் போன்ற செயல்களுக்கு 12 பிரம்படிகள் வரை தண்டனை விதிக்கப்படலாம்.
மேலும், மோசடி தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது குற்றவாளிகள் என அறிவிக்கப்படுபவர்கள் மீது, வங்கி சேவைகள் மற்றும் மொபைல் தொலைபேசி சேவைகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இது போன்ற மோசடிகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.