மக்கள் பீதி..!! செந்தோசா கடற்கரையில் தென்பட்ட முதலைகள்..!!
சிங்கப்பூர்: செந்தோசா நீரில் முதலைகள் காணப்பட்டதால், பாதுகாப்பு காரணமாக மூன்று கடற்கரைகளில் நீர் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
நேற்று (31.01.26)செந்தோசா கோவ் அருகிலுள்ள கடல் பகுதியில் முதலைகள் காணப்பட்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தேசிய பூங்கா வாரியமும் செந்தோசா மேம்பாட்டு ஆணையமும் சம்பவத்தை உறுதிப்படுத்தின.
இதையடுத்து, முதலைகளை கண்டறிய உடனடியாக கூட்டு தேடல் குழு அமைக்கப்பட்டு தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பொது பாதுகாப்பே முதன்மை என்பதால், மறு அறிவிப்பு வரும் வரை சிலோசோ கடற்கரை, பலவான் கடற்கரை மற்றும் டான்ஜோங் கடற்கரைகளில் நீச்சல், கயாக்கிங் உள்ளிட்ட நீர் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த கடற்கரைகள் பொதுமக்கள் செல்ல திறந்தே இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவின் அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. முதலைகளை எதிர்கொண்டால் அமைதியாக இருந்து மெதுவாக பின்வாங்க வேண்டும் என்றும், அவற்றை அணுகவோ, தூண்டவோ அல்லது உணவளிக்கவோ கூடாது என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கை பலகைகள் மற்றும் வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
யாரேனும் முதலையை கண்டால், தேசிய பூங்கா வாரியத்தின் விலங்கு மறுமொழி மைய ஹாட்லைன் 1800-476-1600 என்ற எண்ணில் உடனடியாக தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுமார் மூன்று மீட்டர் நீளமுள்ள ஒரு உப்பு நீர் முதலை மெரினா ஈஸ்ட் டிரைவ் மற்றும் கிழக்கு கடற்கரை பூங்கைக்கு அருகே காணப்பட்ட நிலையில், அது பொதுப் பாதுகாப்புக்கு ஆபத்தாக இருப்பதாக கருதப்பட்டு கருணைக்கொலை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.