வயர்கார்டு மோசடி வழக்கு: கைது செய்யப்பட்ட ஊழியரை நாடு கடத்திய சிங்கப்பூர்..!! எங்கே..??
சிங்கப்பூர் வயர்கார்டு என்ற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஊழியரை சிங்கப்பூர் காவல்துறை நாடு கடத்தி உள்ளது .
ஜெர்மன் மின்னணுப் பணப் பரிவர்த்தனை நிறுவனமான வயர்கார்டு தொடர்பான கணினி மோசடி மற்றும் பண மோசடிகள் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிரிட்ஜ் ஹவுசர் – ஆக்ட்னா (வயது 49) என்ற பெண்ணை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட பிரிட்ஜ் என்பவர் வயர்கார்டு ஆசியாவின் முன்னாள் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை இன்று (மார்ச் 31) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிரிஜிட்டை கைது செய்யுமாறு ஜெர்மானிய அதிகாரிகள் சிங்கப்பூர் காவல்துறைக்கு கோரிக்கை அளித்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையானது, கடந்த ஆண்டு (2025) நவம்பர் 1ஆம் தேதி பிரிஜிட்டை கைது செய்வதற்காக நீதிமன்றத்தில் வாரண்டை அளித்துள்ளது. 2 நாட்களுக்கு பிறகு வாரண்டை நீதிமன்றம் பிறப்பித்ததும், நவம்பர் 4 ஆம் தேதி அன்று சிங்கப்பூர் காவல்துறை அவரை கைது செய்தது.
கைது செய்தபோது மலேசிய வேலை வாய்ப்பு அட்டையை பிரிஜிட் வைத்திருந்ததாகவும், அவர் வயர்கார்டுடன் தொடர்பில்லாத வேறொரு நிறுவனத்தில் அப்பொழுது பணிபுரிந்து வந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.
2016 முதல் 2021 ஆண்டுகளில் கடன் அட்டைகளின் தகவல்களை திருடியதற்காகவும், சட்ட விரோத பரிவர்த்தனைகளுக்கு அங்கீகாரம் அளித்த விவகாரத்திற்காகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பிரிஜிட் கைது செய்யப்பட்ட பின், நாடு கடத்துவதற்காக முறையானக் கோரிக்கைகளை ஜெர்மனி அதிகாரிகள் சமர்ப்பிக்காமல் இருந்த காரணத்தினால், அவருக்கு ஜாமீன் வழங்காமல் காவலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு (2025) டிசம்பர் 23ஆம் தேதி ஜெர்மனி அதிகாரிகள் நாடு கடத்துவதற்காக முறையான கோரிக்கையை அளித்துள்ளது. கோரிக்கை அளித்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டு (2026) பிப்ரவரி 10 ஆம் தேதி பிரிட்ஜ் நாடு கடத்தப்படுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளாார். இது தொடர்பான ஏற்பாடுகளை ஜெர்மனியும் நியூசிலாந்தும் இணைந்து மேற்கொண்டு நேற்று (மார்ச் 30) பிரிஜிட்டை ஜெர்மனிக்கு நாடு கடத்தியுள்ளனர்.
இது போன்ற குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் சிங்கப்பூர் உறுதியாக இருப்பதாகவும், சர்வதேச கடமைகள் மற்றும் உள்ளூர் சட்டங்களுக்கு உட்பட்டு நாடு கடத்தல் விவகாரங்களைக் கையாளும் எனவும் காவல்துறை கூறியுள்ளது.