சிங்கப்பூரில் முதல் முறையாக வாழ்நாள் கற்றல் விருது..!! 15 பேர் தேர்வு..!!
சிங்கப்பூரில் முதல் முறையாக வாழ்நாள் கற்றல் விருது 15 பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக்கின் தொடர் கல்வி மற்றும் பயிற்சித் திட்டத்தின் பட்டதாரிகளுக்கு “ஸ்கில்ஸ்ஃபியூச்சர்” வாழ்நாள் கற்றல் விருது இன்று (மே 4)வழங்கப்பட்டுள்ளது.
5 உள்ளூர் பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்த விருது வழங்கும் விழாவினை நடத்தியுள்ளனர். வாழ்நாள் கற்றலில் தீவிரமாக பங்கேற்று தங்கள் பணிகளுக்கும் அல்லது சமூகத்திற்கும் அதிக பங்குகளை அளிப்பவர்களுக்கு இந்த விருதினை வழங்கி அங்கீகரிப்பதே இந்த விருதின் நோக்கமாகும்.
ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தங்கள் பட்டமளிப்பு வகுப்பில் இருந்து அதிகபட்சமாக 3 சிறந்த பட்டதாரிகளுக்கு வாழ்நாள் கற்றல் விருதை வழங்கியுள்ளது. மேலும் ஒவ்வொரு வெற்றியாளருக்கும் $1,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
விருதை பெற்றவர்களில் ஒருவரான 51 வயதான வாங் பாயு, அவர் 12 ஆண்டுகள் ஓட்டுநர் பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். பின்னர் சொத்து மேலாண்மை துறைக்கு மாறி, அத்துறையில் 16 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஒரு நேர்காணலின் போது அவரிடம் உங்களிடம் ஏன் பல்கலைக்கழக பட்டம் இல்லை..?? என்று ஒரு கேள்வி கேட்டபோது அவர் தன்னை மேம்படுத்திக் கொண்டு கல்விக் கற்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளார்.
தனது குடும்பத்தின் ஆதரவுடன் 46 வயதில் அவர் மீண்டும் பள்ளிக்கு சென்று தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ITE) நைடெக் (Nitec) படிப்பில் சேர்ந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு, பாலிடெக்னிக்கில் கட்டிட சேவைகள் மற்றும் தீ பாதுகாப்பு படிப்பில் சேர்ந்த தனது படிப்பை தொடர்ந்து உள்ளார்.
விருது வழங்கும் விழாவில் கல்வி அமைச்சர் லீ யி ஷியான் கலந்துகொண்டு பேசுகையில், உலகம் மாறி கொண்டு இருக்கிறது எனவும், நாடுகளுக்கு இடையேயான புவிசார் அரசியல் போட்டி தீவிரமடைந்து வருவதாகவும், வர்த்தக முறைகள் மறுவடிவம் பெற்று வருகின்றது எனவும், விநியோக சங்கிலிகள் பாதிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.
கல்வி ஆனது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினாலும், பட்டதாரிகள் அவற்றை தனியாக எதிர்கொள்ள மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார். சவால்களை சந்திப்பதற்கு மட்டுமல்லாமல் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் நாங்கள் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் துணை நிற்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகளுக்கு பணியிடங்களில் அது தொடர்பான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் அதிக நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளூர் கல்வி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (A1) தொடர்பான படிப்புகளை ஊக்குவித்து வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நீ ஆன் பாலிடெக்னிக் பட்டதாரிகள் செயற்கை நுண்ணறிவு தொடர்பான படிப்புகளில் தள்ளுபடிகளையும், மேலும் சில படிப்புகளில் வரவுப் புள்ளிகளைச் சேர்த்து பட்டயங்களையும் பெற முடியும்.