சிங்கப்பூரில் போதைப்பொருள் தாக்கத்தால் ஏற்பட்ட கோர விபத்து..!! ஒருவர் பலி..!!
சிங்கப்பூர்: 34 வயதான நபர் எட்டோமிடேட் என்ற போதை பொருள் தாக்கத்தால் வாகனம் ஒட்டியதில் சாலையில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
காவல்துறை இது குறித்து நேற்று (ஜூன் 9) வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கடந்த மே 5 ஆம் தேதி அன்று அதிகாலை 1:15 மணியளவில் செலெட்டர் நோக்கி செல்லும் மத்திய விரைவுச் சாலையில் 2 கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்து ஏற்பட்டுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்க 2 நபர்கள் பலத்த காயமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
20 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவின்றி இருந்ததாகவும், பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.
காயமடைந்த மற்றொருவர் முதுகெலும்பு மற்றும் வலது கணுக்காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுகள், கல்லீரல் மற்றும் தலையில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் சில சிராய்ப்புகள் உள்ளிட்ட கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அப்போது அவர் சுயநினைவுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் மற்றொரு நபர் இந்த விபத்தில் சிக்கியதாகவும் விபத்திற்கு பிறகு உடல் வலி ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சைக்கு அவர் சென்றதாகவும் தகவல் கிடைத்துள்ளது
இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தியதில், 34 வயதுடைய கார் ஓட்டுநர் வாகனம் ஓட்டும்போது முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாகவும், சாலையில் இருந்த மற்ற வாகனங்கள் மீது அவர் மோதுவது போல் சென்றதாகவும் தெரியவந்துள்ளது .
அந்த நபர் இறுதியில் தனது காரை விரைவுச்சாலையின் நடுவில் நடத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் தெரியவந்தது.
இதில் மோட்டார் சைக்கிள் அவர் நிறுத்தப்பட்ட வாகனத்தின் மீது மோதியுள்ளது. மேலும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பயணியும் எதிர் திசையில் அந்த வாகனங்கள் மீது விழுந்துள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு எந்த ஒரு உதவியயும் அந்தக் கார் ஓட்டுநர்செய்யவில்லை. அதற்கு மாறாக அவர் தப்பித்து சென்றுள்ளார். இதனால் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கள விசாரணைகள் மூலம் அந்த நபரை அடையாளம் கண்டு, புகார் கிடைத்த 13 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.
சுகாதார அறிவியல் ஆணையம்(HSA) அவரது ரத்த மாதிரியே பரிசோதித்த போது அதில் எட்டோமிடேட் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது . அதனால் உடனடியாக அவரது ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் மீது போதைப்பொருள் உட்கண்டு வாகனம் ஓட்டுதல், உயிரழப்பை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் உயிரிழப்பு விபத்துக்கு பிறகு உதவி வழங்க தவறுதல் உள்ளிட்ட 7 போக்குவரத்து விதி மீறல்களின் கீழ் இன்று (ஜூன் 10) நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.