பெற்றோரை கவனிக்காவிட்டால் சொத்தை திரும்ப பெறலாம்: ஐகோர்ட் தீர்ப்பு..!! எங்கே..??
முதுமை காலத்தில் தங்களை பராமரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் பிள்ளைகளுக்கு சொத்துகளையும் எழுதி வைக்கும் பெற்றோருக்கு ஆதரவாக மும்பை ஐகோர்ட் வரலாற்று சிறப்புமிக்க அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
மும்பை லோயர் பரேல் பகுதியைச் சேர்ந்த 68 வயது நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கடந்த 2005 ஆம் ஆண்டு வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். முதுமை காலத்தில் தன்னையும் தனது 60 வயது மனைவியையும் அன்போடு கவனித்து அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையுடன் கடந்த 2023 ஆம் ஆண்டு மே எட்டாம் தேதி அன்று அந்த வீட்டை தனது மகனுக்கு தான பத்திரம் மூலம் அவர் மாற்றி கொடுத்தார்.
ஆனால் சொத்து கைக்கு வந்த சில காலத்திலேயே குடும்ப உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன் உச்சகட்டமாக கடந்த 2025 ஆம் ஆண்டு அந்த முதியவரும் அவரது மனைவியும் சொந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாய நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.
மகன் தங்களை கைவிட்டதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007 இன் கீழ் செயல்படும் சிறப்பு தீர்ப்பாயத்தை அணுகி முறையிட்டனர்.
இந்த வழக்கை முழுமையாக விசாரித்த தீர்ப்பாயம், மகனும் அவரது குடும்பத்தினரும் அடுத்த 60 நாட்களுக்குள் வீட்டை முழுமையாக காலி செய்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அவரது மகன் மும்பை ஹை கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார். அவரது சார்பில் ஆஜரான வக்கீல் எனது மனுதாரரின் தந்தை பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்றவர். அவருக்கு சொந்த தொழிலும் பிற சொத்துக்களும் தாராளமாக உள்ளன. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்.
மேலும் அவர்கள் தங்கள் தீர்ப்பில் முதியோர் நலச் சட்டத்தின் 23 வது பிரிவின்படி பெற்றோரின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் சொத்து மாற்றம் செய்யப்பட்டு அந்த நிபந்தனையை சொத்தை பெற்றுக் கொண்டவர் நிறைவேற்ற தவறினால் அந்த சொத்து மாற்றத்தையே செல்லாததாக அறிவிக்க சட்டத்தில் இடம் உண்டு.
மேலும் இந்த சட்டப்பிரிவின் பயன்பாடு என்பது மூத்த குடிமக்களின் பொருளாதார நிலையை பொறுத்தது அல்ல பெற்றோர் ஏழையா? பணக்காரரா? என்பது முக்கியமல்ல.
சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பராமரிப்பு நிபந்தனைகள் மீறப்பட்டால் சொத்து மாற்றத்தை தாராளமாக செல்லாததாக அறிவிக்கலாம் எனவே பிள்ளைகள் பெற்றோர்களை கவனிக்காவிட்டால் எழுதிக் கொடுத்த சொத்தை திரும்ப பெறலாம் என்று கூறியுள்ளனர்.
பெற்றோரை சரியாக கவனிக்காத பட்சத்தில் பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்துக்களை அவர்கள் தாராளமாக திரும்ப பெறலாம் என்று மும்பை ஐகோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளது.