திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!!
திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனைக் கடத்தி வந்த பயணி கையை அறுத்துக் கொண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அவ்வப்போது போதைப்பொருட்கள், தங்கம், அரிய வகை உயிரினங்கள் போன்றவை கடத்தப்பட்டு வருவதும் அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 13) இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து மலிந்தோ விமானம் திருச்சிக்கு வந்தது.
இந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த ஹைதர் அலி (வயது 41) என்பவர் தனது உடமையில் மறைத்து, ரூ.6 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 6.20 கிலோ ஹைட்ரோபோனிக் எனும் போதைப் பொருளைக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இது குறித்து அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது திடீரென ஹைதர் அலி, அருகில் இருந்தால் பொருளை எடுத்து தனது கையை அறுத்துக் கொண்டுள்ளார். இதையெடுத்து அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் அனுமதித்தனர்.