சிங்கப்பூரில் கிச்சனர் சாலை கொலை வழக்கு: குற்றவாளிக்கு 17 மாத சிறை..!!

சிங்கப்பூரில் கிச்சனர் சாலை கொலை வழக்கு: குற்றவாளிக்கு 17 மாத சிறை..!!

சிங்கப்பூரின் கிச்சனர் சாலையில் நடந்த வன்முறை மோதலில், ஏற்கனவே கத்தியால் குத்தப்பட்டு நிலைகுலைந்து கிடந்த ஒருவரை பிளாஸ்டிக் நாற்காலியால் கொடூரமாகத் தாக்கிய குற்றவாளிக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 17 மாத சிறை தண்டனையை விதித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதியன்று கிச்சனர் சாலையில் நடந்த இந்த மோதலின்போது, 25 வயது தினேஷ் வாசி என்பவரது இதயத்தில் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட நால்வரில் பிரதேவ் என்பவருக்கு முதலில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மற்ற மூவரில், 24 வயது முகமது சஜீத் சலீம் கொலைக் குற்றச்சாட்டுகளையும், 23 வயது சதீஷ் ஜேசன் பிரபாஸ்,கிர்திக் ரோஷன் பிரேம் ஆனந்த் ஆகிய இருவரும் கலவரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டனர்.

அவர்கள் சம்பவத்தன்று அதிகாலை 4 மணியளவில் சாம் லியோங் சாலையில் உள்ள உணவகத்துக்குச் சென்றபோது, தினேஷின்( பாதிக்கப்பட்டவர்) கும்பலுடன் வாக்குவாதம் ஏற்பட்டு முதலாக மாறியது.

தினேஷ் ஓட முயன்றபோது, சஜித் அவரைப் பின்தொடர்ந்து சென்று முதுகுப் பகுதியில் கத்தியால் குத்தி உள்ளார். அப்போது கிர்திக் உணவக நாற்காலிகால் தினேஷைத் தாக்கியுள்ளார். பின்பு பிரதேவ்வும் மற்றொரு நாற்காலியை எடுத்து தினேஷின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் பலமாக இருமுறை தாக்கியுள்ளார்.

தாக்குதலின்போது நிலைகுலைந்து சாய்ந்த தினேஷ், எவ்வித எதிர்த்தாக்குதலும் செய்யவில்லை என அரசாங்க வழக்கறிஞர் ஜோனத்தன் டான் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே காவல்துறையினர் அங்கு சென்று பிரதேவ்வைக் கைது செய்தனர்.

ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்தி வேண்டுமென்றே காயம் விளைவித்தக் குற்றத்திற்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்க வாய்ப்புள்ளது.