சிங்கப்பூர் பள்ளி மாணவர்களுக்கு வயிற்றுக் கோளாறு..! உணவு நிறுவனத்துக்கு $13,000 அபராதம்!

சிங்கப்பூரில் ரிவர் வேலி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய உணவு விநியோக நிறுவனமான Gourmetz நிறுவனத்துக்கு S$13,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிவர் வேலி தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்றுக் கோளாறு அறிகுறிகள் ஏற்பட்டன. இந்தச் சம்பவத்தில் மொத்தம் 60 மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூர் உணவு அமைப்பும் தொற்றுநோய் தொடர்பான அதிகார அமைப்பும் நடத்திய விசாரணையில், 45 மாணவர்கள் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார்.
அந்தப் பள்ளியின் உணவு விநியோகப் பொறுப்பை ஏற்றிருந்த Gourmetz நிறுவனம், பள்ளிகளுக்கான மத்திய சமையலறை உணவுத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்தது.
ஜனவரி 16ஆம் தேதி நிறுவனத்தின் சமையலறையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு உணவுப் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி உணவுக் கறைகள் படிந்த அசுத்தமான தள்ளுவண்டியில் வைக்கப்பட்டிருந்தது. மேலும், உணவுப் பொருட்களைச் சேமிக்கும் குளிரூட்டப்பட்ட அறைகளிலும் சுகாதாரக் குறைபாடுகள் காணப்பட்டன.
இறைச்சி வைக்கப்படும் குளிரூட்டும் அறையின் கதவில் இருந்த ரப்பர் சீல் சேதமடைந்திருந்தது. காய்கறிகள் வைக்கப்படும் குளிரூட்டும் அறையின் கூரையிலும் கரும்புள்ளிகளுடன் அழுக்கு காணப்பட்டது. மேலும், சில உணவுப் பொட்டலங்களில் பாக்டீரியா அளவு அதிகமாக இருந்ததாகவும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
னவரி 28ஆம் தேதி நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில், உணவுப் பொட்டலங்களில் தவறான நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது தெரியவந்தது. காலை 6:48 மணியளவிலேயே தயாரிக்கப்பட்டிருந்த உணவுப் பொட்டலங்களில், காலை 8:30 மணிக்குத் தயாரானதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், பதப்படுத்தப்பட்ட பச்சைக் கோழி இறைச்சி அசுத்தமான பிளாஸ்டிக் தட்டுகளில் வைக்கப்பட்டிருந்ததுடன், உறைந்த உணவுப் பொருட்களும் மூடப்படாமல் சேமிக்கப்பட்டிருந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக Gourmetz நிறுவனம் மீது மொத்தம் ஆறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் மூன்று குற்றச்சாட்டுகளை நிறுவனம் ஒப்புக்கொண்டது. எஞ்சிய மூன்று குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிக்கும்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, 2026ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி நிறுவனத்துக்கு S$13,000 அபராதம் விதிக்கப்பட்டது.
உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது சமையலறைகளைச் சுத்தமாகப் பராமரிப்பதுடன், உணவுப் பொருட்களை முறையாகச் சேமித்து, உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்களின் உடல்நலத்துடன் தொடர்புடைய இந்தச் சம்பவம், உணவு தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் சுகாதார விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதன் அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
