சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் புதிய வசதி! அக்டோபர் 15 முதல் அமல்!

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் புதிய வசதி! அக்டோபர் 15 முதல் அமல்!

சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னிருக்கைப் பயணிகள் குடிநுழைவுச் சோதனையை விரைவாக முடிப்பதற்கான புதிய வசதி அக்டோபர் 15ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) வெளியிட்ட அறிவிப்பின்படி, குறிப்பிட்ட கார் பாதைகளைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிள் பயணிகள் முக அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட தானியங்கி குடிநுழைவுச் சோதனையை மேற்கொள்ளலாம்.

புதிய தானியங்கி முறையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னிருக்கைப் பயணியின் முக அடையாளங்களை ஒரே நேரத்தில் சரிபார்க்க முடியும். இதன் மூலம் குடிநுழைவுச் சோதனையை எளிதாக்குவதுடன், பயண நேரத்தையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சோதனை முறையைப் பயன்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு மோட்டார் சைக்கிளுக்கான குடிநுழைவுச் சோதனை நேரம், நேரடி அதிகாரி மூலம் மேற்கொள்ளப்படும் சோதனையுடன் ஒப்பிடும்போது சுமார் 10 சதவீதம் குறையும். அதாவது, ஒரு மோட்டார் சைக்கிளுக்கு ஏறத்தாழ இரண்டு விநாடிகள் சேமிக்கப்படலாம்.

ஒவ்வொரு பாதையிலும் அதிகாரிகளைத் தொடர்ந்து பணியில் அமர்த்த வேண்டிய அவசியம் குறைவதால், கூடுதல் பாதைகளைத் திறந்து பயணிகளைக் கையாள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நேரங்களில் இது உதவியாக இருக்கும்.

யாரெல்லாம் புதிய வசதியைப் பயன்படுத்தலாம்?
சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரக் குடியிருப்பாளர்கள், நீண்டகால அனுமதி வைத்திருப்பவர்கள் மற்றும் ஏற்கெனவே சிங்கப்பூருக்குள் நுழைந்துள்ள வெளிநாட்டுப் பயணிகள் இந்த முக அடையாளத் தானியங்கி முறையைப் பயன்படுத்தலாம்.

தானியங்கி குடிநுழைவுச் சோதனையை எப்படிப் பயன்படுத்துவது? : முதலில், சோதனைப் பாதைக்குள் நுழைவதற்கு முன்பு தலைக்கவசத்தின் முகக் கவசத்தை உயர்த்த வேண்டும். சூரியக் கண்ணாடி மற்றும் முகக்கவசம் அணிந்திருந்தால் அவற்றை அகற்ற வேண்டும்.

வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை ஓட்டுபவர்கள், தேவையான Autopass அட்டையைச் செலுத்த வேண்டும். பின்னர் MyICA செயலி மூலம் உருவாக்கப்பட்ட QR குறியீட்டை அல்லது கடவுச்சீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும்.

அதன்பிறகு, திரையை நோக்கி முகத்தைச் சரிபார்ப்புக்காகக் காட்ட வேண்டும். அடையாளம் வெற்றிகரமாக உறுதிப்படுத்தப்பட்டதும், பயணிகள் சோதனைப் பாதையிலிருந்து வெளியேறலாம்.

இந்தப் புதிய வசதி மூலம் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிள் பயணிகளின் குடிநுழைவுச் சோதனை மேலும் விரைவாகவும் திறமையாகவும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.