71 பூனைகளுக்கு நேர்ந்த கொடுமை..!! சிங்கப்பூரில் பெண்ணுக்கு 16 வாரங்கள் சிறை!

சிங்கப்பூரின் புக்கிட் பாஞ்சாங் பகுதியில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (HDB) வீட்டில் 71 பூனைகள் பராமரிப்பின்றிக் கைவிடப்பட்ட சம்பவத்தில், 33 வயதுப் பெண்ணுக்கு 16 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
செகார் ரோட்டில் உள்ள வீடமைப்புக் குடியிருப்பில் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி கிடைத்த புகாரைத் தொடர்ந்து, தேசிய கழகமும் காவல்துறையினரும் இணைந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் 61 உயிருள்ள பூனைகள், மூன்று விலங்குகளின் சடலங்கள் மற்றும் ஆறு பூனைகளின் மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
விசாரணையில், அந்த வீட்டில் 2023ஆம் ஆண்டு முதலே மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், ஜன்னல்களில் பாதுகாப்பு வலைகள் பொருத்தப்படாமல் திறந்த நிலையில் இருந்ததால், பூனைகள் கீழே விழும் அபாயமும் நிலவியது.
இந்தப் பூனைகளைப் பராமரிக்கத் தவறியவர்கள் முன்னாள் தம்பதிகளான 37 வயது முஹம்மது கைருல் நைம் மற்றும் 33 வயது நூருல் நதியா என அடையாளம் காணப்பட்டனர். இருவரும் விலங்குகள் மற்றும் பறவைகள் தொடர்பான சட்டத்தின்கீழ் தலா 71 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர். அதில் தலா 24 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்.
வீட்டில் தண்ணீர் மற்றும் மின்சார வசதி இல்லாததுடன், பூனைகள் மிகவும் மோசமான சூழலில் சுமார் 22 மாதங்கள் வாழ்ந்துள்ளன. வீட்டுக்குள் அமோனியா வாயுவின் அளவு அதிகமாக இருந்ததுடன், பெரும்பாலான பூனைகள் உணவின்றி மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்டன. சில பூனைகள் உயிரிழந்த நிலையில் அவற்றின் உடல்களும் அங்கு இருந்தன.
பூனைகளை வீட்டில் விட்டுவிட்டு, அவற்றுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீரை வழங்காமல் இருந்த பெண், வீட்டின் சூழல் மோசமடைந்து வருவதை அறிந்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பூனைகளுக்கு புதிய உரிமையாளர்களைக் கண்டுபிடிக்க முயன்றதைத் தவிர, வேறு எந்தத் தீர்வையும் அவர் மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.
ஏற்கெனவே முன்னாள் கணவரான முஹம்மது கைருல் நைமுக்கு 16 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், ஓராண்டுக்கு செல்லப்பிராணிகளை வளர்க்கவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நவம்பர் 12ஆம் தேதி பெண்ணுக்கும் 16 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கும் அடுத்த ஓராண்டுக்கு செல்லப்பிராணிகளை வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பளித்த நீதிபதி, விலங்குகளால் தங்களுக்காக உதவி கேட்கவோ, தங்கள் நிலையை வெளிப்படுத்தவோ முடியாது என்றும், தங்களை நம்பியிருந்தவர்களாலேயே அவை கைவிடப்பட்டது மிகவும் வருத்தமளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
