சிங்கப்பூரில் அடுத்தடுத்து சைக்கிள் விபத்துகள்: மூன்றாவது உயிரிழப்பு!

சிங்கப்பூரில் அடுத்தடுத்து சைக்கிள் விபத்துகள்: மூன்றாவது உயிரிழப்பு!

சிங்கப்பூரின் ஹூகாங் பகுதியில் கார் ஒன்றும் மின்சார உதவியுடன் இயங்கும் சைக்கிளும் (Power-Assisted Bicycle) மோதிக்கொண்ட விபத்தில், 75 வயது முதியவர் உயிரிழந்தார்.

நவம்பர் 13ஆம் தேதி காலை சுமார் 11:25 மணியளவில், ஹூகாங் அவென்யூ 9 மற்றும் யியோ சூ காங் சாலை சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதுகுறித்து காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் சிக்கிய முதியவர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் தொடர்புடைய காரை ஓட்டிச் சென்ற 54 வயது ஆடவர், காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார். விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சிங்கப்பூரில் மூன்று நாட்களுக்குள் சைக்கிள் ஓட்டிச் சென்றவர்கள் உயிரிழந்த மூன்றாவது விபத்து இதுவாகும். நவம்பர் 12ஆம் தேதி சாங்கி பகுதியில் 24 வயது சைக்கிள் ஓட்டுநரும், நவம்பர் 11ஆம் தேதி காத்தோங் பகுதியில் 37 வயது பெண் சைக்கிள் ஓட்டுநரும் கனரக லாரிகளுடன் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர்.