ஜோகூர்-சிங்கப்பூர் ஹோட்டல் ஒத்துழைப்பு...!!! அஸ்காட் – கொரோனெட் ஒப்பந்தம் உறுதி...!!!
சிங்கப்பூர்: ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் முக்கிய ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டமான கொரோனேஷன் சதுக்கத்தில் ஹோட்டல் வணிகத்தை இயக்க, சிங்கப்பூரின் தங்குமிட நிறுவனம் அஸ்காட், மலேசியாவின் கொரோனேட் பிராபர்டீஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் ஜோகூர் முதலமைச்சர் ஓங் ஹபீஸ் மற்றும் மலேசிய அமைச்சர்கள் முன்னிலையில் இன்று (08.08.25) உறுதி செய்யப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், 207 அறைகள் கொண்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை அஸ்காட் நிறுவும். அதில் முழுநேர உணவகம், நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம், சந்திப்பு கூடங்கள், லவுஞ்ச் போன்ற வசதிகள் அமைக்கப்படுகின்றன. இந்த ஹோட்டல் 2029 இரண்டாம் பாதியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
RM 5 பில்லியன் மதிப்புள்ள இந்த கொரோனேஷன் சதுக்க திட்டம் 9.6 ஹெக்டேர் பரப்பளவில் கட்டப்படுகிறது.
இதில் ஹோட்டல்களுடன் மருத்துவமனைகள், அலுவலகங்கள், தங்குமிடங்கள் மற்றும் ஷாப்பிங் மால் ஆகியவையும் அடங்கும்.
ஷாப்பிங் மாலின் கட்டுமானம் 2026-இல் தொடங்கி, 2030-இல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இது ஜோகூர் பாரு-சிங்கப்பூர் MRT நிலையத்தையும், புக்கிட் சாகிர் குடிவரவு சோதனைச் சாவடியையும் நேரடியாக இணைக்கும் 210 மீட்டர் உயர நடைபாதையையும் உள்ளடக்கியது.
இந்த சதுக்கத்தில் தோராயமாக 4,500 வாகனங்களை நிறுத்தக்கூடிய கீழ்மட்டக் கார் பார்க்கிங் வசதி அமைக்கப்படும்.அதில் சுமார் 700 இடங்கள் ஜோகூர் பாரு-சிங்கப்பூர் MRT நிலைய பயணிகளுக்காக ஒதுக்கப்படும்.