சிங்கப்பூர்–மலேசியா பயணிகளே கவனம்..! 7 ஓட்டுநர்கள் சிக்கினர்..254 வாகனங்கள் பறிமுதல்!

சிங்கப்பூர்–மலேசியா பயணிகளே கவனம்..! 7 ஓட்டுநர்கள் சிக்கினர்..254 வாகனங்கள் பறிமுதல்!

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக எல்லை தாண்டிய வாடகை கார் சேவைகளை வழங்கிய 7 ஓட்டுநர்கள் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர். அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அக்டோபர் 8ஆம் தேதி சிங்கப்பூரின் தரைவழி குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளில் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளின்போது இந்த ஓட்டுநர்கள் பிடிபட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.

தேசிய தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் தேசிய டாக்சி சங்கம் ஆகியவற்றிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2025ஆம் ஆண்டு ஜூலை முதல் இதுவரை 5,400க்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனையிடப்பட்டுள்ளன. அவற்றில் 254 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துத் துறைக்கான மூத்த துணை அமைச்சர் சன் சுவெலிங் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக எல்லை தாண்டிய வாடகை கார் சேவைகளை வழங்கும் ஓட்டுநர்களுக்கு அதிகபட்சமாக 3,000 வெள்ளி அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மேலும், அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படலாம்.

பயணிகள் உரிமம் பெற்ற எல்லை தாண்டிய போக்குவரத்துச் சேவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சிங்கப்பூரிலிருந்து மலேசியாவின் ஜோகூர் பாரு உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல, உரிமம் பெற்ற சேவைகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பையும், உள்ளூர் டாக்சி மற்றும் தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் நோக்கில் சட்டவிரோதச் சேவைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத எல்லை தாண்டிய போக்குவரத்துச் சேவைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எனவே, சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குப் பயணம் செய்யும் பொதுமக்கள், அபராதம் மற்றும் சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க உரிமம் பெற்ற போக்குவரத்துச் சேவைகளை மட்டுமே பயன்படுத்துவது அவசியம்.