கேன்வாஸ் கல்வி தளம் மீது சைபர் தாக்குதல்..!! CSA உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவி..!!
சிங்கப்பூர் : ஆன்லைன் கல்வி கற்றல் தளமான கேன்வாஸ் (CANVAS) ஒரு பெரிய அளவிலான இணைய வழி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது . இதனால் பாதிக்கப்பட்ட உள்ளூர் நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு (CSA) உதவ உள்ளதாக தெரிவித்துள்ளது.
சைபர் தாக்குதலுக்கு உள்ளான நிறுவனங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்காக CSA அந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்ட்ரக்சர் என்ற கல்வி தொழில் நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கேன்வாஸ் என்ற கல்வி தளம் பல பள்ளிகளால் மதிப்பெண் மேலாண்மை மற்றும் பாடப் பொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் ஒரு தளமாகும்.
இந்த தளமானது மே 7-ஆம் தேதி அன்று தற்காலிகமாக செயலிழந்துள்ளது. இதனால் மாணவர்கள் இந்த தளத்தில் உள் நுழைய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சைபர் பாதுகாப்புப் பணியகம் அந்த தளத்தின் நிலைமையைக் கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது.
பாதிப்புக்குள்ளான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, தணிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆதரவையும் ஆலோசனையும் வழங்கி உள்ளதாகவும் சைபர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் மேலாண்மை கழகம் (SIM) இந்த சம்பவத்தால் தாங்களும் பாதிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளது. இது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மன உளைச்சலையும் சிரமத்தையும் ஏற்படுத்தியதாக கூறியுள்ளது.
இந்த நேரத்தில் மாணவர்களுக்கு நேரடியாக ஜூம் (zoom) பாட இணைப்புகளை அனுப்புவது மற்றும் வினாடி வினாக்கள் ஒப்படைப்புகளுக்கான காலக்கெடுவை நீட்டிப்பது உள்ளிட்ட தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வகுப்புகள் சீராக நடைபெறுவதை உள்ளூர் பள்ளிகள் உறுதி செய்துள்ளன. தகவல் பாதுகாப்பை பேணுவது முதன்மை முன்னுரிமைகளாகத் தொடர்கின்றன என்றும் பள்ளி நிர்வாகங்கள் கூறுகின்றன.
இன்ஸ்ட்ரக்சர் என்ற மென்பொருள் மேம்பாட்டு நிறுவனம் கேன்வாஸ் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு தற்போது பயன்படுத்தப்படும் நிலையில் உள்ளதாக நேற்று (மே 8) அதிகாரப்பூர்வ அறிக்கையை இணையத்தில் வெளியிட்டிருந்தது.
கேன்வாஸ் இணையதளத்தில் அங்கீகரிக்கப்படாத செயல்பாடு கண்டறியப்பட்டதாகவும், மேலும் அது தொடர்ந்து விசாரணை தொடங்கியுள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. இதில் தலையிட நிபுணர்களை நியமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த சைபர் தாக்குதல் சம்பவம் குறித்து FBI உள்ளிட்ட அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், மேலதிக நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனித்து கொண்டிருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.