சிங்கப்பூரில் ஹோட்டலுக்கு வெளியே கவிழ்ந்த கார்..!! 9 மாதக் குழந்தை படுகாயம்..!!
சிங்கப்பூர்: பார்க்ராயல் கலெக்ஷன் மெரினா பே ஹோட்டலுக்கு வெளியே ஒரு கார் டாக்சியுடன் மோதியதில் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. அதில் 9 மாத குழந்தையும் அதன் தாயும் படுகாயம் அடைந்துள்ளனர்.
டாக்சி டிரைவர்ஸ் சிங்கப்பூர் அமைப்பின் முகநூல் பக்கத்தில் கென்னத் டாங் என்ற இணையவாசி ஒருவர் இந்த விபத்து குறித்த புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளார்.
அந்த புகைப்படங்களில் பார்க்ராயல் கலெக்ஷன் மெரினா பே ஹோட்டலுக்கு வெளியே கார் ஒன்று கவிழ்ந்து கிடப்பது தெரிகிறது. காரின் முன் பகுதி முழுவதுமாக நொறுங்கி இருக்கிறது.
காரில் உள்ள காற்று பைகள் விரிந்து இருக்கின்றன; காரின் பின் பகுதி மூடி திறந்து இருக்கிறது. மேலும் ஹோட்டலுக்கு வெளியே இருந்த தடுப்புகள் உடைந்து காணப்படுகின்றன.
இந்த விபத்தில் ஒரு காரும், ஒரு டாக்சியும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், நேற்று (மே 26) இரவு சுமார் 10:35 மணி அளவில் நிகழ்ந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
காரிலிருந்த 29 வயது பெண் பயணியும், 9 மாத குழந்தையும் காயமடைந்து சுயநினைவுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
விபத்துக்குள்ளான காரை ஒட்டிய 60 வயது ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்த இருவரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என்பதும் தெரியவந்துள்ளது.
காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக டான் டாக் செங் மருத்துவமனைக்கும், கேகே பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கும் மருத்துவ உதவியாளர்கள் கொண்டு சென்றுள்ளதாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் (SCDF) கூறியுள்ளனர்.