சிங்கப்பூர் நகை கடையில் பரபரப்பு..!! லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள வைரம் திருட்டு..!!
சிங்கப்பூர்: சைனா டவுன் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் $235,000க்கும் அதிக மதிப்புள்ள வைரத்தை திருடிவிட்டு அதற்கு பதிலாக போலி வைரத்தை மாற்றி வைத்த சம்பவம் ஆனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வைரத்தை திருடியதாக சந்தேகிக்கப்படுவதன் பேரில் 2 நபர்கள் நேற்று(ஜூன் 19) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரும் வைரம் வாங்குவதில் ஆர்வமுள்ளவர்கள் போல நகை கடைக்குச் சென்று, வைரத்தைப் பார்ப்பது போல நடித்துக் கொண்டே கைக்குட்டை மூலம் உண்மையான வைரத்திற்கு பதிலாக போலி வைரத்தை அங்கு மாற்றி வைத்துள்ளனர்.
பின்பு அவர்கள் கடையில் இருந்து எந்தவொரு நகையும் வாங்காமல் வெளியேறி சென்றுள்ளனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த கடை உதவியாளர் வைரத்தை சரிபார்த்த போது வைரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து ஜூன் 19ஆம் தேதி அன்று மதியம் சுமார் 3:40 மணியளவில் சிங்கப்பூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததை அடுத்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் வைரத்தை திருடியவர்கள் புகார் அளிக்கப்பட்ட 3 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிசிடிவி மற்றும் காவல்துறை கேமரா பதிவுகளின் உதவியுடன் குற்றவாளிகள் பின் தொடரப்பட்டு, அவர்கள் நாட்டை விட்டது தப்பிக்க முயன்ற போது சாங்கி விமான நிலையத்தில் அவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.
திருடப்பட்ட வைரமானது அவர்களிடமிருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீதும் பொதுவான நோக்கத்துடன் குடியிருப்பில் திருடியது என்ற பிரிவின் கீழ் இன்று (ஜூன் 20) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது.
அவர்கள் மீது குற்றம் நிரப்பிக்கப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.