சிங்கப்பூரில் அதிரடி சோதனை: 74 பேர் கைது.. S$48,600 மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்!

சிங்கப்பூரில் அக்டோபர் 5 முதல் 9ஆம் தேதி வரை நடைபெற்ற நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில், சந்தேகத்தின் பேரில் 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது S$48,600க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) தெரிவித்துள்ளது.
பெடோக், ஹவ்காங், செங்காங், ஜூரோங் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்தச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது சுமார் 243 கிராம் ஹெராயின், 128 கிராம் ஐஸ் எனப்படும் மெத்தாம்பெட்டமைன், 244 கிராம் கஞ்சா மற்றும் 20 கிராம் கெட்டமைன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மாத்திரைகள் மற்றும் பிற கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின், ஐஸ் மற்றும் கஞ்சா ஆகியவற்றின் அளவு, 224 பேர் ஒரு வாரத்திற்குப் பயன்படுத்தக்கூடிய அளவாக இருக்கலாம் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
அக்டோபர் 5ஆம் தேதி, காசியா கிரசென்ட் (Cassia Crescent) அருகிலுள்ள குடியிருப்பு ஒன்றில் 30 வயதுடைய சிங்கப்பூர் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்தக் குடியிருப்பில் சுமார் 49 கிராம் கஞ்சா மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டுடன் தொடர்புடைய பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஜாலான் புக்கிட் ஹோ ஸ்வீ (Jalan Bukit Ho Swee) அருகிலுள்ள மற்றொரு குடியிருப்பில் 38 வயதுடைய சிங்கப்பூர் நபர் கைது செய்யப்பட்டார். அவருடைய பையில் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், குடியிருப்பின் கீழ்தளக் குப்பைத் தொட்டி பகுதியில் கஞ்சா, போதைப்பொருள் தொடர்பான பொருட்கள் மற்றும் LSD முத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
இருவரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 8ஆம் தேதி இரவு, CNB தலைமையில் சிங்கப்பூர் காவல்துறை, சுகாதார அறிவியல் ஆணையம் மற்றும் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) ஆகிய அமைப்புகள் இணைந்து பல இரவு நேர பொழுதுபோக்கு இடங்களில் சோதனை நடத்தின.
இந்த நடவடிக்கையில் மொத்தம் 119 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 86 பேரிடம் உமிழ்நீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக, மற்ற சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என CNB தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் தொடர்புடைய போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
