சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் MRT அருகே குப்பைகள் குவிப்பு..! 200க்கும் மேற்பட்ட அபராதங்கள்!

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் MRT அருகே குப்பைகள் குவிப்பு..! 200க்கும் மேற்பட்ட அபராதங்கள்!

சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் MRT நிலையம் அருகே புல்வெளிகளிலும் நடைபாதைகளிலும் சிகரெட் துண்டுகள் மற்றும் குப்பைகள் அதிக அளவில் காணப்படுவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் குப்பைகளை வீசுவது மற்றும் தடை செய்யப்பட்ட இடங்களில் புகைபிடிப்பது தொடர்பாக இந்த ஆண்டு இதுவரை 200க்கும் மேற்பட்ட அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் (NEA) தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 4ஆம் தேதி, உட்லண்ட்ஸ் MRT நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிகரெட் துண்டுகளும் குப்பைகளும் அதிகமாகக் காணப்படுவதாகப் பொதுமக்களில் ஒருவர் Facebook குழுவில் காணொளி மற்றும் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.

அந்தப் பகுதியில் தினமும் புகை நாற்றம் வீசுவதாகவும், தரையில் வீசப்படும் சிகரெட் துண்டுகளால் தீ விபத்து ஏற்படக்கூடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த தேசிய சுற்றுப்புற வாரியம், உட்லண்ட்ஸ் MRT நிலையம் மற்றும் Causeway Point கடைத்தொகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளின் சுகாதாரம் குறித்த பொதுமக்களின் புகார்களைக் கவனத்தில் எடுத்துள்ளதாகக் கூறியது. அந்தப் பகுதிகளில் தொடர்ந்து வழக்கமான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தது.

மேலும், குப்பைகளை முறையாக அகற்றுவதற்காக அந்தப் பகுதியில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுப்புறமும் தொடர்ந்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

புகைபிடிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், Causeway Point கடைத்தொகுதி நிர்வாகம் குறிப்பிட்ட புகைபிடிக்கும் இடங்களையும் சிகரெட் துண்டுகளைப் போடுவதற்கான தொட்டிகளையும் அமைத்துள்ளது.

சிங்கப்பூரில் பொது இடங்களில் குப்பைகளை வீசுவது சட்டவிரோதமான செயலாகும். முதல் முறை குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் S$2,000 அபராதம் விதிக்கப்படலாம். இரண்டாவது முறை குற்றம் நிரூபிக்கப்பட்டால் S$4,000 வரையும், மூன்றாவது மற்றும் அதற்குப் பிந்தைய குற்றங்களுக்கு S$10,000 வரையும் அபராதம் விதிக்கப்படலாம்.

அதேபோல், புகைபிடிக்கத் தடை செய்யப்பட்ட இடங்களில் விதிகளை மீறுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சுற்றுப்புற வாரியம் எச்சரித்துள்ளது. சிங்கப்பூர் முழுவதும் 49,000க்கும் மேற்பட்ட உள்ளரங்க மற்றும் வெளிப்புற இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார விதிமீறல்களைக் கண்டறிந்தால், பொதுமக்கள் OneService செயலி மூலம் புகார் அளிக்கலாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.