சிங்கப்பூரில் ஓட்டுநர் பயிற்சி கட்டணம் உயர்ந்ததா..?
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவோருக்கு இனி கூடுதல் செலவாகும். அதன்படி, மூன்று முக்கிய ஓட்டுநர் பயிற்சி நிலையங்கள் பயிற்சி வகுப்புகளின் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. இந்த கட்டண மாற்றம் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
உட்லண்ட்ஸில் அமைந்துள்ள சிங்கப்பூர் சேஃப்டி ஓட்டுநர் நிலையம் (SSDC), கட்டாய ஓட்டுநர் பயிற்சிக் கட்டணத்தை 25.2 விழுக்காடு உயர்த்தியுள்ளது.
இதன் படி, ஒரு பயிற்சி அமர்வுக்கான கட்டணம் 24.38 வெள்ளியிலிருந்து 30.52 வெள்ளியாக உயர்ந்துள்ளது. அதேபோல், 100 நிமிடங்கள் கொண்ட ஒரு பாட அமர்வுக்கான கட்டணமும் 23.1 விழுக்காடு உயர்ந்து, 17.71 வெள்ளியிலிருந்து 21.80 வெள்ளியாக மாற்றப்பட்டுள்ளது.
புக்கிட் பாத்தோக் ஓட்டுநர் நிலையத்தில், வார நாள்களில் இரவு 7.20 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் உச்ச நேர பயிற்சிகளுக்கான 100 நிமிட வகுப்பின் கட்டணம் 6.8 விழுக்காடு உயர்த்தப்பட்டு, 80.66 வெள்ளியிலிருந்து 86.11 வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், உபியில் உள்ள கம்ஃபர்ட்டெல்குரோ ஓட்டுநர் நிலையத்திலும் உச்ச நேர பயிற்சிக்கான கட்டணம் 9.3 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதன்படி, முன்பு 81.75 வெள்ளியாக இருந்த கட்டணம் தற்போது 89.38 வெள்ளியாக மாற்றப்பட்டுள்ளது.
இங்கு வார நாள்களில் காலை 10.20 மணி முதல் பிற்பகல் நேரம் வரை மற்றும் மாலை 4.25 மணி முதல் இரவு 10.20 மணி வரை நடைபெறும் வகுப்புகள் உச்ச நேர பயிற்சிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.