ஹாங்காங் பள்ளி முதல்வர் இடைநீக்கம்..!! எதற்காக..??
சிங்கப்பூருக்கு கல்விச் சுற்றுலாவாக மாணவர்களை அழைத்து வந்த ஹாங்காங் பள்ளி முதல்வர் ஒருவர் அங்குள்ள பாதுகாவலர்களை மோசமான வார்த்தைகளால் திட்டியதால் அவர் தற்காலிகமாக பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஹாங்காங்கின் டுவென் முன் மாவட்டத்தில் உள்ள சன் வுய் வர்த்தகச் சமூகப் பள்ளி முதல்வர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக அப்பள்ளியின் நிர்வாகி எட்மண்ட் வோங் சுன்-செக் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அந்த முதல்வரின் செயலானது பொதுமக்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இச்சம்பவம் குறித்து அவருடன் கல்விச் சுற்றுலா சென்ற மாணவர்களிடமும் ஆசிரியரிடமும் விவரங்களை கேட்ட பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பள்ளியின் துணை முதல்வர் தற்காலிக முதல்வராக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஹாங்காங் கல்வி அலுவலகம் பள்ளி முதல்வர் விவாகரத்தை விசாரித்து வருவதாக கூறியிருந்தது
சிங்கப்பூரில் அந்த முதல்வர் பாதுகாவலர்களைத் திட்டும் காணொளி சமூக ஊடகத்தில் பரவி பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மே 23ஆம் தேதி அன்று சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் பேருந்தின் கதவோரமாக நின்றிருந்த அந்த பள்ளி முதல்வர், சாஃப்ரா பாதுகாப்புச் சீருடை அணிந்திருந்த பெண்கள் இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தெரிகிறது.
பேருந்தை பின்னால் நகர்த்த வேண்டும் என்று பெண் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதற்கு அவர் வாயை மூடு என்று அவர்களை சரமாரியாக திட்டியுள்ளார். அவருக்கு பின்னால் இருந்த பெண் அவரை சமாதானப்படுத்த முயற்சித்த போது அவரையும் அந்த முதல்வர் திட்டியுள்ளார்.
இந்த சம்பவம் நிகழ்ந்ததை சாஃப்ரா உறுதி செய்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.