சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணமோசடி..!! 42 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!!
சிங்கப்பூரில் 42 வயதான நபர் ஒருவர் பணமோசடி நடவடிக்கைகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறை இன்று (மே 12) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவர் ஒரு நிறுவனத்தை நிறுவி அதன் ஒரே பங்குதாரராகவும் மற்றும் இயக்குநராகவும் இருந்து வந்துள்ளார். மேலும் 2 வங்கிக் கணக்குகளைத் திறந்து மாதந்தோறும் $5000 செலுத்துவதற்கு பதிலாக மோசடியாக பெற்ற பல லட்சங்களை அந்த கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்துள்ளார்.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் இருவரையும் உள்ளடக்கிய வேலை மோசடிகள் மற்றும் வணிக மோசடிகளில் இருந்து பெறப்படும் மோசடி வருமானம் (S$32,778 மற்றும் US$6,30,000 ) அவரது வங்கி கணக்கிற்கு வந்து சேர்ந்துள்ளது.
அடையாளம் தெரியாத நபர்களின் அறிவுறுத்தலின் படி, அந்த நபர் ஒரு நிறுவனத்தை அமைத்து வங்கி கணக்குகளைத் திறந்து உள்ளார் என்பது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் $5000 தருவதாக கூறி அவர் அந்த இரண்டு கணக்குகளுக்குமான ஆன்லைன் வங்கி உள்நுழைவு தகவல்களையும் அந்த நபர்களுக்கு கொடுத்துள்ளார்.
நிறுவனத்தின் செயல்பாடுகளில் அந்த நபர் தனது பொறுப்புகளை நிறைவேற்ற தவறியதாகவும் அவருக்கு அந்த நிறுவனத்தின் மீது கட்டுப்பாடு இருக்கவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு மோசடி பணப் பரிமாற்றங்கள் குறித்து எந்த ஒரு தகவலும் தெரியவில்லை எனவும் காவல்துறை கூறியுள்ளது.
ஒரு நிறுவன இயக்குநர் என்ற முறையில் மோசடி மூலம் கிடைத்தப் பணத்தை நிறுவனத்தின் வங்கி கணக்கில் செல்ல அனுமதித்தது என்பது அவரது அலட்சியத்தைக் குறிக்கிறது.
1967ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டம், கணினி தவறான பயன்பாட்டுச் சட்டம் மற்றும்1992 ஆம் ஆண்டு ஊழல் போதை பொருள் கடத்தல் மற்றும் பிற கடுமையான குற்றங்கள் சட்டம் ஆகியவற்றை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பணச்சலவையில் ஈடுபடும் எவரும் மிகவும் தீவிரமாக கருதப்படுவார்கள் எனவும், விதி மீறுபவர்கள் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
மேலும் பணச்சலவை நடவடிக்கைகள் ஈடுபடுவதைத் தவிர்ப்பதற்கு பொதுமக்கள் தங்களின் வங்கி கணக்குகளைப் பயன்படுத்தி மற்றவர்கள் நிதியைப் பெறவோ அல்லது அனுப்பவோ அனுமதிக்கக் கூடாது எனவும் பொது மக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.