சிங்கப்பூர்: AYE விரைவுச் சாலை விபத்து..!! 17 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!
சிங்கப்பூரில் பூன் லே பகுதியில் உள்ள ஆயர் ராஜா விரைவுச் சாலையில் (AYE) மே 11-ஆம் தேதி பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 17 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியா-சிங்கப்பூர் பார்டர் கிராஸர் (MSBC) என்ற முகநூல் பக்கத்தில் இணையவாசி ஒருவர் இந்த விபத்து குறித்த காணொளியைப் பதிவேற்றி உள்ளார். அதில் விபத்து நடந்த பகுதிகளில் 3 தீயணைப்பு வாகனங்களும் 2 ஆம்புலன்ஸ்களும் நிறுத்தப்பட்டு இருப்பது தெரிகிறது.
மேலும் கொள்கலன்களை இழுத்து செல்லும் கனரக வாகனமும், 3 லாரிகளும் தொடர்விபத்தில் சிக்கியுள்ளன. அதனால் அந்த வாகனங்கள் அனைத்தும் அருகிலேயே நிறுத்தப்பட்டு இருந்தது.
பல தீயணைப்பு வீரர்களும், போக்குவரத்து காவல்துறையினரும் சம்பவ இடத்தில் நின்று கொண்டிருந்தனர். விபத்து காரணமாக சாலை இடதுபுறம் உள்ள 2 வழித்தடங்கள் மூடப்பட்டு இருந்தன.
கார்ப்பரேஷன் சாலை வெளியேறும் வழிக்கு முன்பு துவாஸ் நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச் சாலையில் திங்கட்கிழமை (மே 11) இரவு 9:25 மணி அளவில் ஒரு சாலை விபத்து குறித்த தகவல் தங்களுக்கு கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் (SCDF) தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததையெடுத்து சம்பவ இடத்திற்கு SCDF வீரர்கள் விரைந்து வந்தனர். அங்கு விபத்தில் சிக்கிக் கொண்டிருந்த 3 நபர்களை ஹைட்ராலிக் மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி மீட்டு உள்ளனர். மேலும் விபத்தில் சிக்கியுள்ள ம பேரை தேசிய பல்கலைக்கழகம் மருத்துவமனைக்கும், 11 பேரை ங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறை கூறியதாவது: இந்த சாலை விபத்தில் ஒரு இலுவை வாகனம் மற்றும் 3 லாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டவர்கள் 17 பேர் 31 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்த விசாரணையைத் தொடர்ந்து காவல்துறை மேற்கொண்டு வருகிறது.