சிங்கப்பூரில் லிஃப்ட் இயந்திரங்களுக்கான புதிய விதிகள்..!!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) லிஃப்ட் உபகரணங்களுக்கான சோதனை மற்றும் ஆய்வுத் தேவைகள் குறித்த மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் அடுத்த மாதம் 12ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அமைச்சகம் அறிவித்துள்ளது.
மனிதவள அமைச்சகம் தெரிவித்ததாவது, இந்த திருத்தங்கள் சர்வதேச மற்றும் தொழில்துறை தரநிலைகளுக்கு ஏற்ப உள்ளன. மேலும், நிறுவனங்கள் தூக்கும் உபகரணங்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், சோதனை மற்றும் ஆய்வு நடைமுறைகளை எளிமைப்படுத்தவும் உதவுவதே இவ்விதிமுறைகளின் நோக்கம் எனவும் கூறியுள்ளது.
புதிய ஒழுங்குகளின் படி, பதிவு செய்யப்பட்ட பிறகு தொடர்ந்து ஓவர்லோட் சோதனை செய்ய வேண்டிய அவசியம் இனி இல்லை. அதற்கு பதிலாக, வழக்கமான மறு ஆய்வுகளை மேற்கொள்ள தகுதிவாய்ந்த பணியாளர்களை நியமிக்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். எனினும், முதல் பயன்பாட்டிற்கு முன் அல்லது பெரிய பழுதுபார்ப்பு மற்றும் மாற்றங்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வாளர்கள் மூலம் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
மேலும், தற்போதைய விதிமுறைகளின் படி, லிஃப்ட்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சோதனை மற்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் புதிய விதிமுறையின் படி, இந்த இடைவெளி 12 மாதங்களுக்கு ஒருமுறை என மாற்றப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் நிறுவனங்களுக்கு செலவுகளை குறைக்கும் வகையிலும் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் வகையிலும் அமையும். தொடர்ந்து செய்யப்படும் ஓவர்லோட் சோதனையால் உபகரணங்கள் சோர்வடையும் என்ற தொழில்துறை கவலைகளையும் இது நீக்கும். அதேசமயம், சரியான ஆய்வு மற்றும் செயல்பாட்டு சோதனைகள் மூலம் பாதுகாப்பு பாதிக்கப்படாமல் உறுதி செய்யப்படும் என MOM தெரிவித்துள்ளது.