சிங்கப்பூரில் பரபரப்பு..!! 12 முறை மளிகைப் பொருட்கள் திருடியவருக்கு சிறை..!!

சிங்கப்பூரில் பரபரப்பு..!! 12 முறை மளிகைப் பொருட்கள் திருடியவருக்கு சிறை..!!

சிங்கப்பூர் :சிங்கப்பூரில் சின் மிங் அவென்யூவில் உள்ள ஷெங் சியோங் பேரங்காடியில் 12 முறை மளிகைப் பொருள்களைத் திருடிய 45 வயது உடற்பயிற்சிப் பயிற்சியாளர் லியோங் சீக் யுயனுக்கு, நீதிமன்றம் நேற்று (அக்டோபர் 8) ஒரு வாரச் சிறைத்தண்டனை விதித்தது.

2025 மே முதல் ஆகஸ்ட் வரை லியோங் பலமுறை அந்தப் பேரங்காடிக்குச் சென்று மளிகைப் பொருள்களைத் திருடியுள்ளார். ஒவ்வொரு முறையும் தானியங்கிக் கட்டண இயந்திரத்தில் சில பொருள்களை மட்டும் வருடி அதற்கான கட்டணத்தைச் செலுத்தியுள்ளார்.
ஆனால், சில பொருள்களை இயந்திரத்தில் வருடாமல், கட்டணம் செலுத்திய பொருள்களுடன் சேர்த்து எடுத்துச் சென்றுள்ளார்.

இதே முறையில் அவர் மொத்தம் 12 முறை பொருள்களைத் திருடியதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

2025 செப்டம்பர் 29ஆம் தேதி, கடை உதவி மேற்பார்வையாளர் பொருள்களைச் சரிபார்த்தபோது சில பொருள்கள் குறைந்திருப்பதைக் கண்டறிந்தார்.
இதையடுத்து கண்காணிப்புப் படக்கருவிப் பதிவுகளை ஆய்வு செய்தபோது, லியோங்கின் நடவடிக்கைகள் தெரியவந்தன.

அக்டோபர் 1ஆம் தேதி லியோங் மீண்டும் அதே பேரங்காடிக்கு வந்தபோது, அங்கு பயன்படுத்தப்பட்டு வந்த முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் அவரை அடையாளம் கண்டு எச்சரிக்கைத் தகவலை அனுப்பியது.

இதையடுத்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, லியோங் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
லியோங் செய்த குற்றங்களை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

அவருக்கு ஒருவகை மனச்சோர்வு இருந்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும், திருடப்பட்ட மளிகைப் பொருள்களுக்கான முழுத் தொகையையும் லியோங் ஏற்கனவே திருப்பிச் செலுத்திவிட்டதாகவும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.
இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் லியோங்குக்கு ஒரு வாரச் சிறைத்தண்டனை விதித்தது.

ஷெங் சியோங் நிறுவனம் 2024 ஏப்ரல் முதல் தனது பேரங்காடிகளில் முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் சந்தேகத்திற்குரிய நபர்களை அடையாளம் கண்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

தானியங்கிக் கட்டண முறையைப் பயன்படுத்தும் பேரங்காடிகளில் பொருள்களை முறையாகப் பதிவு செய்து கட்டணம் செலுத்துவது அவசியம் என்பதையும் இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.