பிரேசிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! மேக்கப் பிடிக்காமல் ஆர்டிஸ்ட்டுக்கு கத்திக்குத்து ..!!
பிரேசிலின் சாவோ ஃபாலோவில் மேக்கப் பிடிக்கவில்லை என ஒரு பெண் கத்தியுடன் சிகை அலங்கார நிலையத்திற்கு சென்று மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை கத்தியால் குத்திய பரபரப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது.
27 வயதான லைஸ் கேப்ரியலா பார்போசோ டா குன்ஹா கடந்த செவ்வாய்க்கிழமை (மே 5) அன்று ஒரு சிகை அலங்காரம் நிலையத்திற்கு (Beauty Parlour) சென்றுள்ளார். அங்கு தனது பணத்தை உடனடியாக திருப்பி கொடுக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.
29 வயதான மேக்கப் ஆர்டிஸ்ட் எடுவார்டோ ஃபெராரி அவரது மற்ற வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்தபோது, அந்தப் பெண் திடீரென அவரது கைப்பையில் இருந்த ஒரு கத்தியை எடுத்து அவரது முதுகில் குத்தியுள்ளார்.
சிகை அலங்கார நிலையத்திற்குள் இருந்தவர்கள் உடனடியாக அந்த பெண்ணைத் தடுத்து நிறுத்தி உள்ளனர். அந்தப் பெண் கத்தியால் குத்தியதில் அந்த மேக்கப் ஆர்டிஸ்ட் பயந்து தப்பித்து ஓடி உள்ளார்.
இந்த நிகழ்வு அனைத்தும் சிகை அலங்கார நிலையத்திற்குள் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
அந்தப் பெண் ஒரு மாதத்திற்கு முன்பு தனது தலை முடிக்கு சாயம் (Hair Colouring) பூசுவதற்காகவும், அடர்த்தியை குறைப்பதற்காகவும் அந்த நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து வெளியேறும் போது அந்தப் பெண் திருப்தி அடைந்ததோடு அதன் முடிவுகளின் புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் பதிவேற்றி இருந்தார்.
ஆனால் பின்னர் அந்தப் பெண் தனது இந்த அலங்காரம் தன்னை பிரேசிலிய சித்திரக்கதை கதாபாத்திரமான “செபோலின்கா” போல காட்டுவதாக கூறி பணத்தை திரும்ப கேட்டு உள்ளார்.
இரு தரப்பினரும் ஒப்புக்கொண்ட நிபந்தனைகளின் படி சேவை முடிக்கப்பட்டதாக கடை கூறியதால், பணத்தை திரும்ப தர மறுத்து விட்டது. அதற்கு அந்தப் பெண் பணம் திரும்ப கொடுக்காவிட்டால் கடைக்கு தீ வைத்து விடுவதாக மிரட்டி உள்ளார்.