சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சட்டவிரோதமாக வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில், போக்குவரத்து போலீசார் இந்த மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் விரைவுச் சாலைகளில் இரண்டு நாள் சிறப்பு அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின் போது, இரண்டு நாட்களில் மொத்தம் 154 சம்மன்கள் பிறப்பிக்கப்பட்டதுடன், விதிமீறல்களில் ஈடுபட்ட இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.
21 மற்றும் 33 வயதுடைய இந்த இரு ஆண்களும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், காப்பீடு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களை ஓட்டியதாலும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அமலாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக 132 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் வேகமாக ஓட்டுதல்,தவறான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் மற்றும் தரமற்ற தலைக்கவசங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வது அனைவரின் பொறுப்பாகும் என்று போக்குவரத்து போலீசார் நினைவூட்டியுள்ளனர்.
ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து,பாதுகாப்பான ஓட்டுநர் பழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், பிற சாலைப் பயனாளர்களுடன் பொறுப்புடன் சாலையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.