சிங்கப்பூர் HDB-யில் திடீர் தீ விபத்து..!!பணிப்பெண்ணின் சமயோசித செயலால் தவிர்க்கப்பட்ட பெரும் உயிர் சேதம்..!

சிங்கப்பூர் HDB-யில் திடீர் தீ விபத்து..!!பணிப்பெண்ணின் சமயோசித செயலால் தவிர்க்கப்பட்ட பெரும் உயிர் சேதம்..!

சிங்கப்பூரின் செங்காங் பகுதியில் உள்ள HDB குடியிருப்பு ஒன்றின் சமையலறையில் நேற்று (ஆகஸ்ட் 18) மாலை ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு பணிப்பெண்ணின் சமயோசித செயலால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

செங்காங் பெர்ன்வேல் ரோட்டில் உள்ள பிளாக் 408B குடியிருப்புக் கட்டிடத்தின் 6-வது மாடி வீட்டில் மாலை 5:00 மணி அளவில் இந்த தீ விபத்து ஆனது நிகழ்ந்துள்ளது.

தீ விபத்தை ஏற்பட்டவீட்டின் சமையலறையில் இருந்து கரும்புகை வெளியேறுவதை மேல் மாடியில் இருந்த ஒரு வீட்டு பணிப்பெண் கவனித்துள்ளார். அவர் உடனடியாக கீழே இறங்கி வந்து பக்கத்து வீட்டுக்காரர்களின் கதவை தட்டி ஆபத்து குறித்து எச்சரித்துள்ளார்.

அந்த நேரத்தில் தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் யாரும் இல்லை. பணிப்பெண் எச்சரித்ததால் வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினருக்கு (SCDF) தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த SCDF தீயணைப்பு வீரர்கள் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து, தண்ணீரை பாய்ச்சி தீயைக் கட்டுப்படுத்தி உள்ளனர்.

சமையலறையில் உள்ள ஒரு மின்சார சாக்கெட்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக வீட்டில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். தீ விபத்தினால் சமையலறை சுவர்கள் முற்றிலும் கருகி, அங்கிருந்த சமையல் உபகரணங்கள் சேதம் அடைந்தன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பிளாக்கில் இருந்த சில குடியிருப்பாளர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த தொகுதி எம்பியான விக்டர் லாய் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் வந்து பாதிப்புகளை ஆய்வு செய்தார். ஆபத்தான நேரத்தில் பதற்றம் அடையாமல் பக்கத்து வீட்டினரை எச்சரித்து விரைவாக செயல்பட்ட அந்த பணிப்பெண்ணின் சாதுரியமான செயலை அவர் வெகுவாக பாராட்டியுள்ளார்..

மேலும் வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கு அவசர கால உதவி எண்களை (SCDF-995) நினைவில் வைத்துக் கொள்ள கற்றுக் கொடுக்குமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தில், ஆபத்தை உணர்ந்தவுடன் ஒரு நொடியும் தாமதிக்காமல் செயல்பட்ட அந்த பணிப்பெண்ணின் சமயோசிதமான செயல், பலரது உயிரையும் பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றியுள்ளது. தீ விபத்து போன்ற அவசர நேரங்களில் பதற்றமடையாமல், சுற்றியுள்ளவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக செயல்படுவது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. ஒருவரின் விழிப்புணர்வும் துணிச்சலும், ஒரு குடும்பத்தின் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடியிருப்பின் பாதுகாப்பையே காப்பாற்ற முடியும்.