சிங்கப்பூரில் சீன புத்தாண்டு உருவான கதை..!!!

சிங்கப்பூரில் சீன புத்தாண்டு உருவான கதை..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி சீன சமூகத்தின் மிகப் பெரிய திருவிழாவான சீன புத்தாண்டு உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கொண்டாடும் இந்த பண்டிகை, சீனர்களின் சந்திர காலண்டரை அடிப்படையாகக் கொண்ட புதிய ஆண்டின் தொடக்கத்தை குறிக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான இந்த மரபு, குடும்ப ஒற்றுமை, வளம், அதிர்ஷ்டம் மற்றும் புதிய தொடக்கத்தை பிரதிபலிக்கிறது.

சீன புத்தாண்டின் வரலாறு, பழங்கால புராணக் கதைகளோடு இணைந்துள்ளது.“நியான்” என்பது ஆண்டின் தொடக்கத்தில் கிராமங்களுக்கு வந்து மக்கள், கால்நடைகள் மற்றும் பயிர்களை அச்சுறுத்தும் கொடிய விலங்காகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அது தோன்றும் என்பதால், மக்கள் பயத்தில் வாழ்ந்தனர்.
ஒரு நாள், ஒரு முதியவர் கிராம மக்களிடம் நியான் மூன்று விஷயங்களுக்கு பயப்படும் என கூறினார்.சிவப்பு நிறம், தீ மற்றும் அதிக சத்தம். அதன்படி மக்கள் வீடுகளை சிவப்பு காகித அலங்காரங்களால் அலங்கரித்து, தீ மூட்டி, வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்தனர். நியான் அந்த ஒளி, சத்தம் மற்றும் சிவப்பு நிறத்தைப் பார்த்து ஓடிப்போய்விட்டதாக நம்பப்படுகிறது.

அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் புதிய ஆண்டின் முதல் நாளில் சிவப்பு விளக்குகள் தொங்கவிடுதல், தீப்பொறிகள் வெடித்தல் மற்றும் கொண்டாட்டக் குரல்கள் எழுப்புதல் வழக்கமாகி விட்டது. இன்றும் சீன புத்தாண்டு விழாவில் காணப்படும் சிங்கநடனம், நாகநடனம் போன்ற நிகழ்ச்சிகளும் நியானை விரட்டும் அடையாளமாகக் கருதப்படுகின்றன.

சிங்கப்பூர் முழுவதும் இந்த திருநாளை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்கள், சலுகை விற்பனைகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும். குறிப்பாக சைனா டவுன் பகுதி ஒளிவிளக்குகள் மற்றும் திருவிழா சந்தைகளால் களைகட்டும். பாரம்பரிய சிங்கநடனம், நாகநடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் கவர்கின்றன.

சீன புத்தாண்டு நாளில் குடும்பத்தினர் ஒன்று கூடி சிறப்பு விருந்து உணவு பகிர்ந்து கொள்வதும், சிறுவர்களுக்கு சிவப்பு உறைகளில் “ஆங் பாவ்” வழங்குவதும் வழக்கமாக உள்ளது. இது செல்வம் மற்றும் அதிர்ஷ்டம் பெருக வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

சிங்கப்பூர் போன்ற பல பண்பாட்டு சமூகங்கள் இணைந்து வாழும் நாட்டில், இந்த புராணக் கதை வெறும் கதையாக மட்டுமல்லாது பாரம்பரியத்தையும் ஒற்றுமையையும் எடுத்துக்கூறும் சின்னமாகவும்,தீமையைத் துரத்தி நன்மையை வரவேற்கும் ஒரு நம்பிக்கையின் திருநாளாகவும் பார்க்கப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK