மனைவியின் முகத்தில் ப்ளீச்சிங் திரவம் ஊற்றிய கணவர்..!! சிங்கப்பூர் நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சித் தண்டனை!

மனைவியின் முகத்தில் ப்ளீச்சிங் திரவம் ஊற்றிய கணவர்..!! சிங்கப்பூர் நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சித் தண்டனை!

சிங்கப்பூரில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறின்போது, அவரைத் தலையால் முட்டியதுடன் முகத்தில் ப்ளீச்சிங் திரவத்தையும் ஊற்றிய 40 வயது ஆடவருக்கு 5 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் 3 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்திரா பின் முகமது ஷாரும் (Indra Bin Mohamed Shahrum) என்ற அந்த ஆடவர் மீது மொத்தம் 9 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. அவற்றில் 4 குற்றச்சாட்டுகளை அவர் கடந்த நவம்பர் 27ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். எஞ்சிய குற்றச்சாட்டுகளையும் தண்டனை விதிக்கும்போது நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டது.

கடந்த மார்ச் 7ஆம் தேதி, தனது மனைவி வேறொரு ஆடவருடன் வெளியே சென்றது குறித்து இந்திரா அதிருப்தி அடைந்துள்ளார். மனைவி நள்ளிரவில் வீடு திரும்பியதும் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. குடும்பச் செலவுகள் மற்றும் மனைவியின் மற்ற ஆடவர்களுடனான பழக்கம் குறித்தும் அவர் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த மனைவி சில பொருள்களை வீசியதுடன், அன்றிரவு வீட்டை விட்டு வெளியே தங்குவதற்காகப் பயணப் பைகளை எடுத்துத் தயாராகியுள்ளார்.

இதையடுத்து, இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் அறையிலிருந்து வரவேற்பறை வரை நீடித்துள்ளது. அப்போது இந்திரா தனது தலையால் மனைவியின் மார்புப் பகுதியில் முட்டியுள்ளார். பின்னர் ப்ளீச்சிங் திரவத்தை எடுத்து மனைவியின் முகத்தில் ஊற்றியுள்ளார்.

ப்ளீச்சிங் திரவத்தின் பெரும்பகுதி மனைவியின் ஆடையில் பட்டுள்ளது. இருப்பினும், சிறிதளவு அவரது இடது கண்ணிலும் தெறித்துள்ளது. இதனால் கண்ணில் எரிச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மனைவி அவசரக் காவல் உதவி எண்ணான 999ஐ அழைத்து புகார் அளித்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்குச் செல்லவில்லை என்றும், தூங்கி எழுந்தபோது வலி குறைந்ததாக உணர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தம்பதியருக்கு 8 ஆண்டுகளாகத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் பாட்டி மற்றும் அத்தையின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளனர்.

குடும்ப வன்முறைச் சம்பவம் மட்டுமின்றி, இந்திரா மற்றொரு திருட்டு வழக்கிலும் தொடர்புடையவர் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 4ஆம் தேதி, புகிஸ் ஜங்ஷன் அருகே போதைப்பொருள் பயன்படுத்திய பின்னர் அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்.

அப்போது சிங்டெல் நிறுவனம் அமைத்திருந்த தற்காலிகக் கண்காட்சிக் கூடத்தைக் கடந்து சென்றபோது, அங்கிருந்த பொருள்களைத் தேடியுள்ளார். பின்னர் அலமாரியின் சாவியைக் கண்டுபிடித்து, பூட்டியிருந்த அலமாரியைத் திறந்து S$500 மதிப்புள்ள மடிக்கணினியைத் திருடியுள்ளார்.

இந்திரா ஏற்கெனவே பல திருட்டு, பிறரது சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர் என அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.

அவருக்கு குறைந்தது 5 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் 3 பிரம்படிகளும் விதிக்க வேண்டும் என அரசுத் தரப்பு கோரியது.

இந்திராவின் வழக்கறிஞர், அவரது மனைவி அவரை மன்னித்துவிட்டதாகவும், குடும்பத்திற்குத் திரும்பி குழந்தைகளைப் பராமரிக்க அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கருணை மனு சமர்ப்பித்தார்.

இருப்பினும், வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராவுக்கு 5 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் 3 பிரம்படிகளும் விதித்து உத்தரவிட்டார்.