LRT தண்டவாளத்தில் பையை வீசிய 17 வயது இளையர்..! காவல்துறை விசாரணை!

LRT தண்டவாளத்தில் பையை வீசிய 17 வயது இளையர்..! காவல்துறை விசாரணை!

சிங்கப்பூரின் பொங்கோல் பகுதியில் உள்ள கோவ் LRT நிலையத்தில், தளமேடையில் இருந்து பையை தண்டவாளம் நோக்கி வீசியதாகக் கூறப்படும் 17 வயது இளையரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

செப்டம்பர் 27ஆம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்போது கோவ் LRT நிலையத்தில் ரயில் சேவைகள் இயங்கிக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளமேடையில் இருந்த இளையர் ஒருவர் பையை தரையில் அடித்த பின்னர், தடுப்புகளுக்கு இடையிலான இடைவெளி வழியாக தண்டவாளத்தைத் தாண்டி அந்தப் பையை வீசியதாக இணையத்தில் வெளியான காணொளியில் பதிவாகியுள்ளது.

காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில், அந்தப் பையில் இரண்டு கட்டிகள் பனிக்கூழ் (Icecream) இருந்தது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து செப்டம்பர் 29ஆம் தேதி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளின் உதவியுடன் சம்பந்தப்பட்ட 17 வயது இளையர் அடையாளம் காணப்பட்டார். தற்போது அவர் காவல்துறை விசாரணைக்கு உதவி வருகிறார்.

SBS Transit நிறுவனத்தின் தகவலின்படி, சம்பந்தப்பட்ட இளையர் ஐந்து பேர் கொண்ட குழுவில் ஒருவராக இருந்ததாகக் கண்காணிப்பு கேமரா பதிவுகள் காட்டுகின்றன.

அந்தக் குழுவில் நால்வர் ரயில் நிலையத்திற்குள் நுழையும்போது பயண அட்டையைப் பயன்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டணம் செலுத்தாமல் நுழைவது குற்றமாகும் என்பதால், இதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அவசரமாகச் செயல்படுவது தொடர்பான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 17 வயது இளையருக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

பொது மக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறை தீவிரமாகக் கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.